ரூ.4.9 கோடிக்கு விற்பனைக்கு வந்த தங்க மெர்சிடிஸ் பென்ஸ் கார்

ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் தொழிலதிபர் உலி அன்லைக்கர். போதும் போதும் என்று கூறும் அளவுக்கு பணம் இருப்பதால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று அவர் யோசித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிரே நின்றிருந்த தனது ஸ்போர்ட்ஸ் காரை பார்த்தவுடன் அவருக்கு புதிய ஐடியா ஒன்று பிறந்தது.
அந்த காரை தங்கத்தால் வடிவமைக்க அவர் முடிவு செய்தார். இதற்காக, 35 பொற்கொல்லர்களை அவர் பணிக்கு அமர்த்தினார். 35 தொழிலாளர்களின் 30,000 மணி நேர அயராத உழைப்பில் அவரது மெக்லேரன் எஸ்எல்ஆர் கார் தங்க ரதம் போன்று மாறியது.
இந்த காரில் 24 கேரட் தங்கத்தை பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர். இதற்காக, 5 கிலோ தங்கம் செலவழிக்கப்பட்டுள்ளது. மேலும், காரின் உள்பக்கத்தில் 600 விலையுயர்ந்த கற்களும் பதிக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் கன்சோல், டேஷ்போர்டு ஆகியவை தங்கத்தால் வேயப்பட்டுள்ளன.
மேலும், சக்கரங்களின் டிஸ்க்குகள், ஹெட்லைட்டுகள் ஆகியவற்றிலும் தங்கத்தால் வேயப்பட்டு மினுக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் துணை பிராண்டான மெக்லேரன் எஸ்எல்ஆர் கார்தான் தங்க காராக மாற்றப்பட்டுள்ளது.
இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் 5.4 லிட்டர் எஞ்சின் 646 முதல் 999 பிஎச்பி வரை ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 337 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.
இந்த நிலையில், தனது தங்க காரை விற்பனை செய்ய அன்லைக்கர் திட்டமிட்டுள்ளார். குறைந்தபட்சமாக தனது தங்க காருக்கு ரூ.4.9கோடி விலையை அவர் நிர்ணயித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








