தரம் இல்லாமல் வாகனம் விற்றால் ரூ.1 லட்சம் அபராதம், சிறை

தரம் குறைந்த பாகங்கள் மற்றும் தொழில்நுட்ப கோளாறுடன் வாகனங்களை விற்பது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, வாகன தயாரிப்பு தர நிலையை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதற்காக, புதிய மோட்டார் வாகன வரைவு சட்டத்தை தயாரிப்பதற்காக உயர்மட்ட குழு ஒன்றையும் அந்த அமைச்சகம் அமைத்தது. இந்த குழு சமீபத்தில் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
அதில், தொழில்நுட்ப கோளாறு அல்லது தரமற்ற பாகங்கள் கொண்ட வாகனத்தை விற்பனை செய்யும் நிறுவனத்திற்கு, ஒவ்வொரு வாகனத்திற்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, தொழில்நுட்ப கோளாறு அல்லது தரமற்ற பாகங்களால் பிரச்னை ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் மாநில போக்குவரத்து துறையிடம் புகார் கொடுக்கலாம். இந்த புகார் தொடர்பாக, போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்துவர்.
இந்த விசாரணையில், வாகனத்தில் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகன நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் அல்லது 3 மாதம் சிறை தண்டனை, இல்லாவிட்டால் இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும்.
இந்த புதிய சட்டம் குறித்து, பல்வேறு வல்லுனர்களுடன் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று வாகன தயாரிப்பு தர நிலைகளை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டு வர மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் கடந்த ஆண்டு முயற்சித்தது. ஆனால், இந்த சட்ட வரைவை பாராளுமன்ற நிலைக்குழு நிராகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








