திருட்டை தடுக்க கார்களில் ஜி.பி.எஸ். கருவி கட்டாயம்: நொய்டாவில் புதிய சட்டம்

டெல்லி அருகே உள்ள தொழில்நகரங்களான நொய்டா மற்றும் காசியாபாத்தில் கார் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. நொய்டாவில் மட்டும் மாதத்திற்கு 200 கார்கள் வரை திருட்டு போகிறது.
பெரும் தலைவலியை ஏற்படுத்திய இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் முடிவு செய்தனர். இதன்படி, நொய்டா மற்றும் காசியாபாத் நகரங்களில் கார்களுக்கு செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் ஜி.பி.எஸ். கருவியை பொருத்துவதை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளனர்.
இந்த கருவியை உடனடியாக பொருத்துமாறு கார் உரிமையாளர்களை கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், நொய்டா மற்றும் காசியாபாத் நகரங்களில் உள்ள டீலர்களை அழைத்து புதிய கார்களுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி விற்பனை செய்யுமாறு அறிவுறுத்தினர்.
நொய்டா நகர போலீஸ் சூப்பிரெண்டு அனந்த் தேவ் கூறுகையில்," ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்ட கார்கள் திருடப்பட்டால், கார் சென்றுகொண்டிருக்கும் இடம், வேகத்தை வைத்து அவற்றை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ரூ.6,000 முதல் ஜி.பி.எஸ். கருவிகள் கிடைக்கின்றன. லட்சக்கணக்கில் பணம் போட்டு கார் வாங்குபவர்களுக்கு இந்த தொகை பெரிதாக இருக்காது," என்றார்.
நொய்டாவின் பிரபல வணிக வளாகத்தில் சமீபத்தில் திருட்டுபோன டொயெட்டோ இன்னோவா காரையும், டாடா இன்டிகா காரையும் ஜி.பி.எஸ். கருவி பொருத்தியிருந்தால் போலீசார் சில மணி நேரங்களில் கண்டுபிடித்துவிட்டனர். இதனால்தான், கார்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவதை கட்டாயமாக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








