புதிய ஆலை அமைக்க ஹூண்டாய்க்கு வலை வீசும் குஜராத் அரசு

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கேந்திரமாக குஜராத் உருவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிரான்சை சேர்ந்த பியூஜியட் நிறுவனம் குஜராத்தில் ரூ.4,000 கோடி முதலீட்டில் புதிய ஆலை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, மாருதி நிறுவனமும் குஜராத்தில் ரூ.6,000 கோடி முதலீட்டில் புதிய கார் ஆலை அமைக்க உள்ளது.
இதுதவிர, சென்னை அருகே ஆலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனமும் குஜராத்தில் புதிய ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், சென்னை அருகே தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வரும் நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமான தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தையும் குஜராத்துக்கு இழுக்க அம்மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் விதமாக தென்கொரிய தூதர் கிம் ஜூங் கியூன் குஜராத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அம்மாநில முதல்வர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது தென்கொரிய நிறுவனங்கள் குஜராத்தில் முதலீடு செய்வது குறித்து முதல்வர் மோடி மற்றும் அம்மாநில தொழிற்துறையினருடன் கிம் ஜூங் விரிவாக விவாதித்தார்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கிம் ஜூங் கியூன் கூறியதாவது:
"உலக அளவில் ஆட்டோமொபைல் கேந்திரமாக குஜராத் உருவெடுத்துள்ளது. தென் கொரிய நிறுவனங்கள் குஜராத்தில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழ்நிலைகள் நிலவுகின்றன.
குறிப்பாக, ஹூண்டாய் கார் நிறுவனம் தற்போது புதிய கார் ஆலை அமைக்க வேண்டிய நிலையில் உள்ளது. இந்த சூழ்நிலையில், குஜராத்தில் ஹூண்டாய் நிறுவனம் புதிய ஆலை அமைப்பதற்கான சாதகமான சூழ்நிலைகள் நிலவுகின்றன.
மேலும், ஹூண்டாய் புதிய கார் ஆலை அமைப்பதற்கு சிறப்பு சலுகைகளை வழங்குவதாக குஜராத் அரசு உறுதி கூறியுள்ளது. ஆனால், குஜராத்தில் புதிய கார் ஆலை அமைப்பது குறித்து ஹூண்டாய் நிறுவனம்தான் முடிவு செய்ய வேண்டும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








