பெட்ரோல் கார் விற்பனை குறைவு: டீசல் கார் விற்பனை அதிகரிப்பு

இந்த நிலையில், விலை நிர்ணயத்துக்கான சுய அதிகாரத்தை மத்திய அரசிடமிருந்து பெற்ற எண்ணெய் நிறுவனங்கள் நினைத்தபோதெல்லாம் பெட்ரோல் விலையை தங்கள் இஷ்டம் போல் ஏற்றி வருகின்றன. இதன் விளைவால் கார்களுக்கு பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கடந்த சில மாதங்களாக பெட்ரோல் கார்களுக்கான தேவை வெகுவாகவே குறைந்துவிட்டது. அதேவேளை, டீசல் கார்களுக்கான தேவை கணிசமாகவே உயர்ந்துள்ளதால், அதை நிறைவு செய்ய முடியாமல் கார் நிறுவனங்கள் தவித்து வருகின்றன.
இதற்கு ஒரு படி மேலே சென்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் பெட்ரோல் கார் உற்பத்தி செய்வதையே நிறுத்திவிட்டு டீசல் கார் உற்பத்தியை அதிகரித்துள்ளது.
அதிக மைலேஜ், டீசல் விலை குறைவு போன்ற காரணங்களால் டீசல் கார்களின் விற்பனை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. கடந்த ஆண்டு வரை மார்க்கெட்டில் 60 சதவீதம் அளவுக்கு பெட்ரோல் கார்கள் விற்பனையில் முன்னிலை வகித்தன.
ஆனால், கடந்த சில மாதங்களாக இந்த நிலைமை அடியோடு மாறிவிட்டது. கடந்த ஆகஸ்ட்டில் மாருதி அறிமுகம் செய்த புதிய ஸ்விப்ட் காருக்கு ஒரு லட்சம் புக்கிங்குகள் பெறப்பட்டன.. இதில், 88 சதவீதம் டீசல் ஸ்விப்ட் காருக்கு புக்கிங் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை செய்து வரும் செவர்லே பீட் மற்றும் ஃபோர்டு பிகோ கார்களின் விற்பனையில் 80 சதவீதம் டீசல் மாடல்கள்தான். இதேபோன்று, டொயோட்டோ விற்பனை செய்து வரும் எட்டியோஸ் மற்றும் லிவா கார்களில் 60 சதவீதம் டீசல் கார்கள்தான் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், டீசல் கார்களின் தேவையை நிறைவு செய்வதற்காக ஆண்டுக்கு 1 லட்சம் டீசல் எஞ்சின்களை ஃபியட்டிடமிருந்து வாங்குவதற்கு மாருதி ஒப்பந்தம் செய்துள்ளது.
இதேபோன்று,மார்க்கெட் பங்களிப்பு குறைந்து வருவதால் புதிய டீசல் மாடல்களை களமிறக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








