தமிழகத்தில் புதிய மாடல்களை பிரபலபடுத்த ரோடு ஷோ: எச்எம் துவங்கியது

நாட்டின் பழம்பெரும் வாகன உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் பல்வேறு காரணங்களால் மார்க்கெட்டில் வலுவிழந்தது.
இந்த நிலையில், மார்க்கெட்டை மீண்டும் பிடிக்கும் வகையில் புதிய மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது.
தனது புதிய மாடல்களை மக்களிடத்திலும், மார்க்கெட்டிலும் பிரபலபடுத்தும் வகையில் நாடு முழுவதும் ரோடு ஷோக்களை நடத்த அந்த நிறுவனம் முடிவு செய்தது.
முதல்கட்டமாக, மேற்குவங்கம், அஸ்ஸாம், பீஹார், ஒரிஸ்ஸா உள்ளிட்ட மாநிலங்களில் ரோடு ஷோக்களை அந்த நிறுவனம் துவங்கியது.
இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் ரோடு ஷோவை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நேற்று துவங்கியது.
சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து துவங்கப்பட்ட இந்த ரோடு ஷோவை சென்னை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் மனோஜ் ஜா கொடியசைத்து துவங்கி வைத்தார்.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட புதிய அம்பாசடர் கிராண்ட் காரும்,வின்னர் மினிடிரக்கும் இந்த ரோடு ஷோவில் இடம்பெற்றுள்ளன.
தவிர, விரைவில் வர இருக்கும் கார் மற்றும் சரக்கு வாகனங்கள் குறித்த விபரங்களுடன் கூடிய பேனர்கள் ரோடு ஷோவில் இடம்பெற்றுள்ள அம்பாசடர் மற்றும் வின்னர் மினிடிரக்கில் கட்டப்பட்டிருந்தன.
சென்னை, வேலூர், திருச்சி, பட்டுக்கோட்டை, மதுரை, பாளையங்கோட்டை, நாகர்கோயில், கோவை மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களில் இந்த ரோடு ஷோ 22 நாட்கள் நடைபெறும் என ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








