அடுத்த மாதம் புதிய சிட்டி அறிமுகம்: ஹோண்டா உறுதி

நம் நாட்டு மிட் சைஸ் கார் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் காராக ஹோண்டா சிட்டி உள்ளது. இந்த நிலையில், ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டுக்கு சமமாக மிட் சைஸ் கார் மார்க்கெட்டிலும் கடும் போட்டி நிலவுகிறது.
புதிய வெர்னா, புதிய பியஸ்ட்டா, வென்ட்டோ, ரேபிட் என மிட் சைஸ் கார் செக்மென்ட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போட்டி நிலவுகிறது.இதனால், போட்டியை சமாளிக்கவும், விற்பனையை தக்க வைக்கவும் சிட்டி காரை மேம்படுத்தி அறிமுகப்படுத்துகிறது ஹோண்டா.
கடந்த செப்டம்பரில் தாய்லாந்தில் இந்த புதிய சிட்டி கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த மாதம் புதிய சிட்டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சிட்டி காருக்கு உதிரிபாகங்கள் சப்ளை தடைபட்டது.
இதனால், இந்தியாவில் புதிய சிட்டி கார் அறிமுகம் தாமதமாகியுள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் மத்தியில் புதிய சிட்டி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போதைய மாடலில் உள்ள அதே பெட்ரோல் எஞ்சின்தான் புதிய சிட்டி காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். ஆனால், வெளிப்புற வடிவமைப்பில் பல புதிய மாற்றங்களுடன் வருகிறது சிட்டி. அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா கார்களில் இடம்பெற்றுள்ள பல நவீன வடிவமைப்புகளுடன் சிட்டி வர உள்ளது.
இதனால், புதிய சிட்டி கார் மீது வாடிக்கையாளர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் சிட்டி கார் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கும் வரும் என்று ஹோண்டா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








