உதிரிபாக தட்டுப்பாடு: இந்தியாவில் கார் உற்பத்தியை குறைக்கும் ஹோண்டா

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், சியல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஜப்பானில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளால் கார் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
ஜப்பானிலுள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், கார் உதிரிபாகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவிலுள்ள ஜப்பான் நிறுவனங்களின் கார் தொழிற்சாலைகளுக்கு உதிரிபாகங்கள் சப்ளை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதில், ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் மேமாதம் முதல் நொய்டா தொழிற்சாலையில் உற்பத்தியை பாதியாக குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஹோண்டா சியல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவு துணை தலைவர் ஞானேஸ்வர் சென் கூறியதாவது:
"கிரேட்டர் நொய்டாவிலுள்ள தொழிற்சாலை ஆண்டுக்கு ஒரு லட்சம் கார்களை தயாரிக்கும் திறன் பெற்றது. ஆனால், ஜப்பானிலிருந்து உதிரிபாகங்களை சப்ளை செய்வதில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், வரும் மேமாதம் முதல் சிங்கிள் ஷிப்டில் மட்டும் கார் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது
மேலும், கார் உற்பத்தியை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடவடிக்கைகளை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறோம். விரைவில் நிலைமை சீரடையும் என நம்புகிறோம்," என்றார்.
ஜப்பானை சேர்ந்த மற்றொரு கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ, இந்தியாவில் கார் உற்பத்தியை 70 சதவீதம் குறைப்பதாக சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








