வெளிநாட்டு கார் நிறுவனங்கள் மீது வாடிக்கையாளர் புகார்: விசாரணைக்கு சிசிஐ உத்தரவு

இந்திய கார் சந்தையின் அபரிமிதமான வளர்ச்சி தக்கவாறு, உதிரிபாகங்களின் தேவையும் அதிகரி்த்து வருகிறது. கார் நிறுவனங்களின் டீலர்கள் மட்டுமின்றி, ஆட்டோபார்ட்ஸ் கடைகளிலும் கார்களுக்கான உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஹூண்டாய், ஹோண்டா, வோக்ஸ்வேகன் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் கார்களுக்கான உதிரிபாகங்களை தங்களது டீலர்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்கின்றன. வெளிமார்க்கெட்டில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உதிரிபாகங்களை வாங்க முடியாது.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உதிரிபாகங்களை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. மேலும், டீலர்கள் பலரும் தங்கள் பங்குக்கு உதிரிபாகங்களுக்கு கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். வெளியிலும் உதிரிபாகங்களை வாங்க முடியாது என்பதால் வாடிக்கையாளர்கள் வேறு வழியின்றி டீலர்கள் சொல்லும் பணத்தை கொடுக்க வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.
இதுகுறித்து இந்திய காம்படிஷன் கமிஷன் கண்காணிப்பு அமைப்பிடம் வாடிக்கையாளர்கள் பலர் புகார் அளித்தனர்.
சந்தையில் தங்களது ஆளுமைத்தன்மை பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்கள் செய்யும் இதுபோன்ற அடாவடித்தமான செயல்களால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகாரில் தெரிவித்து இருந்தனர்.
இதையடுத்து, புகார்கள் குறித்து 45 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு விசாரணைப்பிரிவு டைரக்டர் ஜெனரலுக்கு சிசிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட கார் நிறுவனங்கள் மீது காம்ப்படிசன் சட்டப்பிரிவு 4ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, விளக்கம் கேட்டு இ-மெயில் மூலம் ஹோண்டா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்களுக்கு சிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால், இரு நிறுவனங்களும் இதுவரை பதிலளிக்கவில்லை. பிரச்சினையில் சிக்கியுள்ள மற்றொரு நிறுவனமான ஹூண்டாய், சிசிஐ அமைப்பிடமிருந்து இதுதொடர்பான எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








