உதிரிபாகங்கள் தட்டுப்பாடு: ஜாஸ் புக்கிங்கை நிறுத்தியது ஹோண்டா

கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உதிரிபாக சப்ளை தடைபட்டதால், ஹோண்டா நிறுவனத்தின் கார் உற்பத்தியில் பலத்த அடி விழுந்தது.
இப்போதுதான் நிலைமை சற்று சீரடைந்து கார் உற்பத்தியை ஹோண்டா முடுக்கி விட்டது. இந்த நிலையில், வேறு ரூபத்தில் தற்போது ஹோண்டா கார் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தில் பெய்து வரும் கனமழையால் அங்கிருந்து ஹோண்டா கார்களுக்கான உதிரிபாகங்கள் சப்ளை அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஜாஸ் மற்றும் பிரியோ காருக்கு தாய்லாந்து ஆலையிலிருந்துதான் உதிரிபாகங்களை ஹோண்டா இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் ஜாஸ் காருக்கான புக்கிங்கை ஹோண்டா நிறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஹோண்டா சியல் இந்தியா நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத்தலைவர் ஞானேஸ்வர் சென் கூறுகையில்," உதிரிபாகங்கள் சப்ளை திடீரென முடங்கியுள்ளதால் ஜாஸ் காருக்கான புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.
வரும் டிசம்பர் முதல் வாரத்தில் நிலைமை சீரடைந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். வாடிக்கையாளர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம் என்பதை கருத்தில்க்கொண்டு ஜாஸுக்கு புக்கிங் பெறுவதை நிறுத்தினோம்," என்றார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் ஜாஸ் காரின் விலையை 1.75 லட்சம் வரை ஹோண்டா அதிரடியாக குறைத்தது. இதனால், ஜாஸ் கார் விற்பனை தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் தற்போது ஜாஸ் விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








