புத்தம் புது ஹூண்டாய் இயான்- சிறப்பு பார்வை

மார்க்கெட்டில் ஆல்ட்டோவின் ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க புதிய புரட்சியாளனாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளது ஹூண்டாய் இயான்.
புளுயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பு, சொகுசு அம்சங்கள், விலை என அனைத்து அம்சங்களிலும் நடுத்தர மக்களுக்கான கார் என்று கூறும் அளவுக்கு தன்னிறைவான அம்சங்களை கொண்டுள்ளது இயான்.
மேலும், ஷோரூம்களில் இயோனை டெஸ்ட் டிரைவ் செய்ய வரிசையில் பல மணிநேரம் காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை பார்த்தாலே, வாடிக்கையாளர் மத்தியில் இயோனுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்பதை கண்கூடாக காண முடிகிறது.
இயோனின் முக்கிய சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.
எஞ்சின்:
இயான் காரில் 3 சிலிண்டர் கொண்ட 814சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 56 பிஎச்பி ஆற்றலையும், 76.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 130 கிமீ வேகம். மேலும், 17 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டுகிறது.
வெளிப்புற வடிவமைப்பு:
அடுத்த தலைமுறைக்கான புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பில் வெர்னாவுக்கு அடுத்தபடியாக ஹூண்டாய் வடிவமைத்துள்ள கார் இயான். முன்பக்கம் பார்த்தால் இது சிறிய கார் என்று சத்தியம் அடித்து கூறினாலும் நம்ப முடியவில்லை.
பெரிய முகப்பு விளக்குகள், பாடி கலர் பம்பர், குரோம் பூச்சு பூசப்பட்ட முன்பக்க கிரில் ஆகியவை இயோனின் முகத்திற்கு பளிச் அழகை கொடுக்கிறது. பக்கவாட்டில் கண்ணாடிகளுக்கு கீழே பெல்ட் லைன் சீராக வந்து முன்பக்கத்தில் கீழே இறங்குவது புளூயிடிக் ஸ்கல்ப்சர் வடிவமைப்பின் தத்துவார்தத்தை காட்டுகிறது. பின்பக்க சக்கரத்தின் வீல் ஆர்ச் பக்கவாட்டிலும் இயோனுக்கு பெரிய கார் தோற்றத்தை உருவாக்கிக் கொடுக்கிறது.
பின்பக்கத்தில் புதுமையான வடிவமைப்பை பெற்றுள்ளது இயான். பழைய சான்ட்ரோவின் சாயலை சற்று ஒத்திருந்தாலும் ஹூண்டாய் அதை மறைக்கும் யுக்திகளை அழகாக கையாண்டு புதுமையான வடிவத்தை கொடுத்திருப்பது கவர்கிறது.
உள்பக்க வடிவமைப்பு:
டியூவல் டோன் பியேஜ் இருக்கைகள் இயான் உள்பகத்தை காஸ்ட்லி காராக காண்பிக்கிறது. டேஷ்போர்டு பிளாஸ்டிக்கின் தரமும் ஹூண்டாய் கார்தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஸ்பீடோமீட்டர் புதுமையான வடிவமைப்பை கொண்டிருக்கிறது. சென்ட்ரல் கன்சோல் முன்பக்கத்தின் அழகை கூட்டுகிறது. கதவுகளில் பொருட்கள் வைப்பதற்கான பாக்கெட்டும் போதுமானதாக இருக்கிறது.
சொகுசு மற்றும் கையாளுமை:
ஹூண்டாய் இயோனில் 4 பேர் வசதியாக அமர்ந்து செல்லலாம். ஆனால், 5ம் நபரை ஏற்றினால் பின்னால் இருப்பவர்களின் பாடு திண்டாட்டம்தான். மேலும், உயரமான டிரைவர் அமர்ந்து இருக்கையை பின்பக்கம் தள்ளினால், பின்னால் அமர்ந்து இருப்பவர்களுக்கு சிரமமாக இருக்கும்.
இருக்கையில் ஹெட்ரெஸ்ட், மொபைல் போன் சார்ஜர், டிஜிட்டல் கடிகாரம் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.
எஞ்சின் போதுமான பிக்கப்பை கொடுப்பதால் சிக்னல்களில் சிறிய எஞ்சின் பிக்கப்பில் திணறுமோ என்ற படபடப்பு தேவையில்லை. இதன் எஞ்சின் சிறப்பான பிக்க்பபை தருகிறது. கையாளுமையை பொறுத்தவரை நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு அருமையான கார் என்று கூறலாம்.
மிட் மற்றும் டாப் வேரியண்ட்களில் ஏசி, டியூவல் ட்ரிப் மீட்டர், கியர் ஷிப்ட் இண்டிகேட்டர், டில்ட் ஸ்டீயரிங் வீல், மேனுவல் அட்ஜெஸ்ட்மெண்ட் கொண்ட டில்ட் ஸ்டீயரிங் ஆகியவை இயோனுக்கு கூடுதல் சிறப்பை சேர்க்கிறது.
பாதுகாப்பு:
டாப் வேரியண்ட்டில் டிரைவர் சைடு ஏர்பேக், சைல்டு லாக், பவர் விண்டோஸ், பவர் ஸ்டீயரிங் உள்ளிட்டவை இயான் பாதுகாப்பான கார் என்ற உணர்வை தருகிறது. மேலும், எஞ்சின் இம்மொபைலைசர், சென்ட்ரல் லாக்கிங், முன்பக்கம், பின்பக்க இருக்கைகளில் சீட் பெல்ட், கீலெஸ் என்ட்ரி, பனி விளக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களில் இயோனில் இருக்கிறது. ஆனால், இதன் பிரேக் மித வேகத்தில் சாமர்த்தியமாக இருந்தாலும், அதிவேகத்தில் சற்று சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.
மைலேஜ்:
ஏஆர்ஏஐ அளித்துள்ள சான்றின்படி இயான் லிட்டருக்கு 21.1 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இயான் ஆன்ரோடு விலை விபரங்கள்:
| வேரியண்ட் | சாலிட் | மெட்டாலிக் |
| டிலைட் | ரூ.3.20 லட்சம் | ரூ.3.24 லட்சம் |
| டிலைட்(ஆப்சனல்) | ரூ.3.45 லட்சம் | ரூ.3.49 லட்சம் |
| எரா | ரூ.3.68 லட்சம் | ரூ.3.72 லட்சம் |
| மேக்னா | ரூ.3.97 லட்சம் | ரூ.4.01லட்சம் |
| மேக்னா(ஆப்சனல்) | ரூ.4.10 லட்சம் | ரூ.4.14 லட்சம் |
| ஸ்போர்ட்ஸ் | ரூ.4.39 லட்சம் | ரூ.4.43 லட்சம் |


Click it and Unblock the Notifications








