புதிய இயோன் காரை சென்னையில் அறிமுகம் செய்தது ஹூண்டாய்

நடுத்தர வர்க்கத்தை திரும்பி பார்க்க வைத்துள்ள இயோன் கார் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.2.62 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் மாருதி ஆல்ட்டோவுக்கு பெரும் போட்டியாக வந்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5,000 இயோன் கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னையில் நேற்று இயோன் காரை ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.
இயோன் அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசிய ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எச்.டபிள்யூ.பார்க் கூறி்யதாவது:
"புத்தம் புது பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள இயோன் கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப இயோன் காரை வடிவமைத்து களமிறக்கியுள்ளோம்.
ஆண்டுக்கு 1.5 லட்சம் இயோன் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அடுத்த ஆண்டு தென் அமெரிக்கா மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளுக்கு இயோனை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்றார்.
சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இயோன் கார் ரூ.2.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








