இந்திய ஆட்டோ மார்க்கெட் 14% வளர்ச்சி பெறும்: வோக்ஸ்வேகன் தலைவர்

ஆசியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஆட்டோமொபைல் சந்தை என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட உலக பொருளாதார சரிவு காரணமாக வீழ்ச்சி கண்ட ஆட்டோமொபைல் சந்தை, அடுத்த சில ஆண்டுகளிலேயே ஏற்றம் பெற்றது.
பொருளாதார மீட்சியடைந்ததால், கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் சந்தை வரலாறு காணாத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்தது. கடந்த ஆண்டு நம் நாட்டின் ஆட்டோமொபைல் சந்தை அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 30 சதவீத வளர்ச்சி பெற்றது.
இந்த நிலையில், இந்த ஆண்டு ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சி எதிர்பார்த்தபடி அமையவில்லை. பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன் வட்டி உயர்வு, உற்பத்தி செலவீனங்கள் கூடுதலால் கார்களின் விலையை ஏற்றியது உள்ளிட்ட பல காரணங்களால், இந்த ஆண்டு ஆட்டோமொபைல் சந்தையால் அதிவேக வளர்ச்சியை பெற முடியாமல் இறுக்கமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆண்டை ஒப்பி்டும்போது, இந்த ஆண்டு ஆட்டோமொபைல் சந்தையின் விற்பனை வளர்ச்சி பாதியளவுக்கே இருக்கும் என கருதப்படுகிறது.
இதுகுறித்து வோக்ஸ்வேகன் கார் நிறுவனத்தின் தலைவர் நீரஜ் கார்க் கூறியதாவது:
" பல்வேறு காரணங்களால் ஆட்டோ மார்க்கெட்டில் மந்தமான சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், எங்களது விற்பனை இந்த ஆண்டு கணிசமாக உயர்ந்து வருகிறது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 32,500 கார்களை விற்பனை செய்திருந்த நாங்கள் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் 39,366 கார்களை விற்பனை செய்துள்ளோம்.
மேலும், இந்த ஆண்டு இந்திய ஆட்டோமொபைல் சந்தை 12 முதல் 14 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








