மாருதியின் நன்னடத்தை பத்திர நடைமுறை சட்டவிரோதமானது?

ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள கார் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு மாருதி நிர்வாகம் நிர்பந்தம் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மானேசர் கார் ஆலை தொழிலாளர்கள் ஒரு மாதம் வரை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர்.
இதனால், மாருதி கார் உற்பத்தி கடும் பாதிப்பு ஏற்பட்டது. ஒருவழியாக ஹரியானா அரசு நடத்தி சமரச பேச்சுவார்த்தை மூலம் வேலை நிறுத்தப்போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், தொழிலாளர்களிடம் நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திட மாருதி நிர்வாகம் கட்டாயப்படுத்தியது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த குருதாஸ் குப்தா மற்றும் பிஜேபியை சேர்ந்த கோபிநாத் முண்டே ஆகியோர் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பினர்.
இதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,"நன்னடத்தை பத்திரத்தில் தொழிலாளர்களிடம் வற்புறுத்தி கையெழுத்து வாங்கிக்கொண்டு பணிக்கு அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். 1947ம் ஆண்டு தொழிற்துறை குற்றவியல் சட்டத்தின்படி இது தொழிலாளர் விரோத போக்காக கருதலாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இதில், வேடிக்கையான விஷயம், மாருதியின் நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்து வாங்கும் நடைமுறைக்கு ஹரியானா அரசு இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, அம்மாநில தொழிலாளர் நலத்துறையினர் நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திடாத தொழிலாளர்கள் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளது.
இந்த நிலையில், மத்திய அரசின் கருத்து குறித்து மாருதி நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications