இத்தாலி நிறுவனத்தின் உதவியுடன் ஸ்டாலியோ எஞ்சினை மறுவடிவமைக்கும் மஹிந்திரா

நாட்டின் முன்னோடி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா, இரு சக்கர வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறது. பவர் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய மஹிந்திரா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்டாலியோ என்ற 100சிசி பைக்கை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது.
பைக் விற்பனை மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாலியோ எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் வரை 5,181 ஸ்டாலியோ பைக்குகளை மட்டும் மஹிந்திராவால் விற்பனை செய்ய முடிந்தது.
இந்நிலையில், ஸ்டாலியோவின் கியர் பாக்சில் அடிக்கடி பழுது ஏற்படுவதாக புகார்கள் வரத்துவங்கின. இது ஸ்டாலியோவின் விற்பனையை வெகுவாக பாதித்தது மட்டுமின்றி மஹிந்திரா நிறுவனத்தின் மீதான நம்பிக்கையையும் குறைப்பதாக அமைந்தது.
இதையடுத்து, ஸ்டாடலியோ பைக் கியர் பாக்சில் ஏற்பட்டுள்ள தொழி்ல்நுட்ப பிரச்சினையை இத்தாலியை சேர்ந்த எஞ்சின் எஞ்சினியரிங் நிறுவனத்தின் உதவியுடன் சரிசெய்யும் முயற்சியில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஸ்டாலியோ பைக்கின் எஞ்சின் மற்றும் கியர் பாக்சை மறு வடிவமைப்பு செய்யும் பணிகள் எஞ்சின் எஞ்சினியரிங் ஆய்வு கூடத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஸ்டாலியோ உற்பத்தியை மஹிந்திரா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டவுடன் மீண்டும் உற்பத்தியை துவங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்த இருந்த மோஜோ 300சிசி பைக் அறிமுக தேதியையும் மஹிந்திரா ஒத்திவைத்துள்ளதாக தெரிகிறது. ஸ்டாலியோவில் தொழில்நுட்ப பிரச்சினை எழுந்ததையடுத்து, மோஜோ பைக்கின் தொழில்நுட்ப அம்சங்களையும் சோதனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








