உதிரிபாக தட்டுப்பாட்டால் இந்தியாவில் உற்பத்தியை குறைக்க ஹோண்டா முடிவு

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்தியாவில் சியல் நிறுவனத்துடன் இணைந்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவில் ஹோண்டா சியலின் தொழிற்சாலை அமைந்துள்ளது.
இந்த தொழிற்சாலையில் கார் உற்பத்திக்கு தேவையான எஞ்சின் பாகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் ஜப்பானிலுள்ள ஹோண்டா தொழிற்சாலையிலிருந்து அனுப்பப்பட்டு வந்தன.
இந்நிலையில், ஜப்பானில் நிகழ்ந்த இயற்கை சீற்றங்களால், அங்குள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி அடியோடு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், நொய்டாவிலுள்ள ஹோண்டா சியல் தொழிற்சாலைக்கு தேவையான உதிரிபாகங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
இதனால், அடுத்த மாதம் முதல் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்துக்கொள்ள ஹோண்டா சியல் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டா சியல் துணைத்தலைவர் ஞானேஸ்வர் சென் கூறியதாவது:
"இந்த மாதத்திற்கு தேவையான உதிரிபாகங்கள் கையிருப்பில் உள்ளதால், உற்பத்தி வழக்கம்போல் நடக்கும். ஆனால், உதிரிபாகங்கள் சப்ளை தடைபட்டுள்ளதால், அடுத்த மாதம் உதிரிபாகங்கள் கையிருப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, உதிரிபாகங்கள் கையிருப்புக்கு தக்கவாறு, அடுத்த மாதம் முதல் உற்பத்தியை தற்காலிகமாக குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளோம். இதுபற்றி விரிவாக தற்போது எதுவும் கூற முடியாது," என்றார்.


Click it and Unblock the Notifications








