இந்தியாவில் புதிய எஞ்சின் ஆலை அமைக்க ஜாகுவார்- லேண்ட்ரோவர் திட்டம்

கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவித்த பிரிட்டனை சேர்ந்த ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் நிறுவனங்களை கடந்த 2008ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து டாடா மோட்டார்ஸ் கையகப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடுகளை டாடா செய்து வருகிறது. இதனால், ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார் நிறுவனங்கள் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பியுள்ளன.
இந்த நிலையில், ஜாகுவார்-லேண்ட் ரோவர் கார்களுக்கு சொந்தமாக எஞ்சின் ஆலை இல்லை. இதனால், ஃபோர்டு நிறுவனத்திடமிருந்து தற்போது ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களுக்கு எஞ்சின் வாங்கி பொருத்தப்படுகிறது.
எனவே, ஜாகுவார்-லேண்ட்ரோவர் நிறுவனங்களுக்கு சொந்தமாக புதிய எஞ்சின் ஆலை பிரிட்டனின் வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் 400 மில்லியன் பவுண்ட் முதலீட்டில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கு இங்கிலாந்து அரசு 10 மில்லியன் பவுண்ட் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இதுதவிர, இந்தியாவிலும் புதிய எஞ்சின் ஆலை அமைக்க ஜாகுவார்-லேண்ட்ரோவர் திட்டமிட்டு இருப்பதாக பிரிட்டனிலிருந்து வெளிவரும் சண்டே டெலிகிராப் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, லேண்ட்ரோவர் கார்களை இந்தியாவில் அசெம்பிள் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
தவிர, எஞ்சின் ஆலையும் இந்தியாவில் அமைந்தால் ஜாகுவார் மற்றும் லேண்ட்ரோவர் கார்களின் விலை கணிசமாக குறையும். இதனால், இந்தியாவில் அந்த கார்களின் விற்பனையும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








