அப்பா 'வேஸ்ட்'; தாத்தா 'பெஸ்ட்'-சுவாரஸ்ய ஆய்வு

வயதானவர்கள் கார் ஓட்டும்போது பாதுகாப்பு குறைவு என்ற பரவலான கருத்தையும் இந்த சர்வே தகர்த்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ப்ரெட் ஹென்ட்ரிடிக்(64) என்பவர்தான் இந்த சர்வேக்கு பிள்ளையார் சுழி போட்டவர். எப்படி என்கிறீர்களா? இந்த ஆய்வை நடத்துவதற்கு அவரது சொந்த அனுபவமே காரணம் என்பது கொசுறு தகவல்.
பிலடெல்பியாவிலுள்ள ஒரு மருத்துவமனையில், குழந்தைகள் நல மருத்துராக பணிபுரிந்து வரும் இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் தனது பேரக்குழந்தையுடன் காரில் சென்றுள்ளார்.
அப்போது தன் பேரக்குழந்தையிடம், என்னுடன் காரில் வரும்போது பயமாக இருக்கிறதா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த குழந்தை, அப்பாவுடன் காரில் போகும்போதுதான் பயமாக இருக்கும். உங்களுடன் வரும்போது பயம் இல்லை என்று கூறியுள்ளது.
இதைக்கேட்டு உற்சாகமடைந்த அவர், எல்லா குழந்தைகளும் இவ்வாறு உணர்கிறார்களா என்பதை அறிந்துகொள்ள இதுகுறித்து ஆய்வு நடத்த களமிறங்கினார். தனது ஆய்வை 15 வயதுக்குட்பட்ட சுமார் 12,000 குழந்தைகளிடம் மேற்கொண்டார்.
இதில், பெரும்பாலான குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டி கார் ஓட்டும்போது பயமாக இல்லை என்று தெரிவித்தன.
இதுதவிர,ஆய்வுக்கு வலுசேர்க்கும்விதமாக கடந்த 2003ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை 15 மாகாணங்களில் கொடுக்கப்பட்ட விபத்துக் காப்பீட்டு இழப்பீடு தொடர்பான தகவல்களையும் அலசி ஆராய்ந்தார்.
அதிலும், பெற்றோர் கார் ஓட்டும்போது விபத்துக்களில் சிக்கிய குழந்தைகள் அதிக காயங்களை அடைந்ததாகவும், அதேவேளை தாத்தா, பாட்டி கார் ஓட்டும்போது விபத்துக்களில் சிக்கிய குழந்தைகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பிய தகவல்களும் கிடைத்தன.
இதை ஆய்வறிக்கையாக தொகுத்து சமீபத்தில் ஜர்னல் பீரியாட்ரிக்ஸ் என்ற புத்தகத்தில் முடிவுகளை வெளியிடப்பட்டுள்ளார்.
இதுகுறித்து நார்த்வெஸ்டர்ன் பல்கலைகழக பேராசிரியர் ஜோசப் சாக்கோ கூறியதாவது:
"காரில் குழந்தைகளை அழைத்து செல்லும்போது பெற்றோரைவிட முதியவர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்கின்றனர். காரின் முன் இருக்கையில் குழந்தைகளை உட்கார வைப்பதில்லை.
குழந்தைகளுக்கு சீட் பெல்ட் போட்டுத்தான் அழைத்து செல்கின்றனர்.குழந்தைகளை அழைத்து செல்லும்போது சீரான வேகத்தில் முதியவர்கள் காரை ஓட்டுகின்றனர். இதுபோன்ற காரணங்களால், குழந்தைகள் பாதுகாப்பாக உணர்கின்றனர்," என்றார்.


Click it and Unblock the Notifications








