தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்:ஜெனரல் மோட்டார்சுக்கு 850 கார்கள் உற்பத்தி 'அவுட்'

குஜராத் மாநிலம், ஹலோலில் அமைந்துள்ள ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த 16 ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கடந்த 25ந் தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகம் காலக்கெடு விதித்திருந்தது. இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவர் என்று எச்சரிக்கையும் விடுத்தது.
இதையடுத்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த பாதி தொழிலாளர்கள் பணிக்கு திரும்பினர். இருப்பினும், ஆலையின் 30 சதவீத தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதனால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இரண்டு வாரங்களை கடந்துள்ளதால், இதுவரை 850 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இப்பிரச்னை குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் துணைத்தலைவர் பாலேந்திரன் கூறியதாவது:
"70 சதவீத தொழிலாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். மேலும, வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 250 தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வேலைநிறுத்த போராட்டத்தை மாநில அரசு சட்டவிரோத வேலைநிறுத்த போராட்டமாக அறிவித்துள்ளபோதிலும், தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்," என்று குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications