ஜெனிவா மோட்டார் ஷோவில் அசத்திய லம்போர்கினியின் புதிய சூப்பர் கார்

இத்தாலியை சேர்ந்த லம்போர்கினி மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன்மிக்க சூப்பர் கார்களை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது. இந்நிறுவனத்தின் மூர்சிலாகோ ஸ்போர்ட்ஸ் கார் உலக புகழ்பெற்றது. மூர்சிலாகோவை சூப்பர் கார் என்றே ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் அழைக்கின்றனர்.
இந்தநிலையில், அவென்டடோர் LP700-4 என்ற சூப்பர் காரை லம்போர்கினி நிறுவனம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் வடிவமைப்பு ஜெனிவா மோட்டார் ஷோவுக்கு வந்த பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.
கூபே மாடல் வடிவமைப்பு கொண்ட இந்த காரின் சேசிஸ் முழுவதும் கார்பன் ஃபைபர் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் அவென்டடோரின் மொத்த எடை வெகுவாக குறைந்துள்ளது. 1575 கிலோ மட்டுமே கொண்ட அவென்டடோரை பழைய மூர்சிலாகோ LP640-4 மாடலுடன் ஒப்பிடும்போது எடை 90 கிலோ குறைந்துள்ளது.
தவிர, முகப்பு மற்றும் பின்புறத்தில் அலுமினியம் பிரேம்கள் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளன. இதில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. இது கரடு முரடான சாலைகளிலும் சொகுசான பயணத்தை அளிக்கும்.
மேலும், சாலைகளின் நிலவரத்துக்கு ஏற்ற வகையில் ஹைட்ராலிக் லிப்ட் மூலம் காரின் உயரத்தை 40 மிமீ வரை கூட்ட முடியும். இதுதவிர, மூர்சிலாகோ மற்றும் லம்போர்கினியின் பிற மாடல்களில் உள்ள அனைத்து அம்சங்களின் கலவையாக அவென்டடோர் LP700-4 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








