லூதியானாவில் கல்லூரி மூலம் மாணவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ஆர்டிஓ அலுவலங்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
மேலும், டிரைவிங் லைசென்சுக்கு விண்ணப்பம் கொடுப்பது முதல் லைசென்சை கையில் வாங்குவது வரை க்யூவில் கால்கடுக்க நின்று வேலைகளையும், நேரத்தையும் தேவையில்லாமல் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், டிரைவிங் லைசென்ஸ் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி வாயிலாகவே லைசென்ஸ் வழங்கும் புதிய முறையை அறிமுகம் செய்ய லூதியானா வட்டார போக்குவரத்து அலுவலகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அங்குள்ள அனைத்து கல்லூரி நிர்வாகத்துடன் வட்டார போக்குவரத்து துறை பேச்சு நடத்தியுள்ளது. அங்குள்ள அரசு கல்லூரி முதல்வர்களுக்கும் டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் அதிகாரத்தை மாநில அரசு வழங்க உள்ளது.
இதுகுறித்து லூதியானா வட்டார போக்குவரத்து துறை அலுவலர் அஸ்வனி குமார் கூறியதாவது:
" மாணவர்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் அதிகாரம் அரசு கல்லூரி முதல்வர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பித்த மாணவர்களுக்கு கல்லூரி வாயிலாகவே டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்படும்.
இதன்மூலம், மாணவர்கள் மிகுந்த பயன்பெறுவர். அவர்களது பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களும் தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணத்தை கல்லூரி வாயிலாக அனுப்பி டிரைவிங் லைசென்சை பெற்றுக்கொள்ள முடியும்.
இத்திட்டம் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்பதோடு, போலி ஆவணங்களை சமர்பித்து லைசென்ஸ் பெறுவதும் தடுக்கப்படும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








