ஸ்டாலியோவில் கியர் பாக்ஸ் பிரச்சினை:தவிப்பில் மஹிந்திரா

கனரக மற்றும் பயணி்கள் வாகன தயாரிப்பில் புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனம், இரு சக்கர வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வந்த மஹிந்திரா நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதன்முதலாக 110சிசி திறன் கொண்ட ஸ்டாலியோ பைக்கை அறிமுகப்படுத்தியது.
மஹிந்திராவின் எதி்ர்பார்ப்புக்கு தக்கவாறு ஸ்டாலியோவின் விற்பனை அமையவில்லை.கடந்த ஜனவரி வரை
5,135 ஸ்டாலியோ பைக்குகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. ஹீரோ ஹோண்டா, டிவிஎஸ், பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் மாதத்திற்கு சராசரியாக ஒரு லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்து வருகின்றன.
ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக வெறும் 400 ஸ்டாலியோ பைக்குகள் மட்டுமே மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. விற்பனை வெகுவாக குறைந்து வரும் நிலையில், மஹிந்திரா நிறுவனத்திற்கு மேலும் ஒரு சோதனை காலம் வந்துள்ளது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஸ்டாலியோ பைக்குகளின் கியர் பாக்சில் அடிக்கடி பழுது ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து, பிரபல பத்திரி்க்கையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனால், ஸ்டாலியோவின் விற்பனையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்த புகாரை மஹிந்திராவும் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து மஹிந்திரா நிறுவனம் தரப்பில் கூறப்பட்ட தகவலில், "சப்ளை செயினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இது சிறிய தொழில்நுட்ப பிரச்சினைதான் என்றாலும் சரி செய்து தரப்படும். வரும் ஜூன் மாதம் முதல் வெளிவரும் ஸ்டாலியோவில் இந்த பிரச்சினை தொழிற்சாலையிலேயே சரிசெய்யப்படும்," என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால்,ஸ்டாலியோ பைக்கில் எழுந்துள்ள பிரச்சினை குறித்தும், அதனை சரிசெய்து தருவது குறித்தும் மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








