எகிடுதகிடான புக்கிங்: வெளிநாடுகளில் புதிய எஸ்யூவி அறிமுகத்தை ஒத்திவைத்தது மஹிந்திரா

கடந்த மாதம் 28ந் தேதி எக்ஸ்யூவி 500 என்ற பெயரில் மஹிந்திரா அறிமுகம் செய்த புதிய எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்டு 7 நாட்களில் 8,000 புதிய எஸ்யூவி புக்கிங் செய்யப்பட்டதால் திக்குமுக்காடி போயுள்ளது மஹிந்திரா.
குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய எஸ்யூவி பல்வேறு வெளிநாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக மஹிந்திரா தெரிவித்தது. மேலும் தென் ஆப்ரிக்காவிலும் இந்த புதிய எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், எதிர்பாராத வகையில் இந்திய சந்தையிலேயே புதிய எக்ஸ்யூவி 500 புக்கிங் 8,000ஐ தொட்டுள்ளதால் மஹிந்திரா சற்று தடுமாறிப் போய்தான் உள்ளது. ஏனெனில், தற்போது மாதத்திற்கு 2,000 புதிய எக்ஸ்யூவி 500 கார்களை மட்டுமே மஹிந்திரா உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
அடுத்த 4 மாதங்களில் உற்பத்தி செய்யப்படும் புதிய எஸ்யூவிக்கான புக்கிங் முடிந்துவிட்டதால்,உற்பத்தி நெருக்கடியை கருதி சமீபத்தில் புதிய எஸ்யூவிக்கான புக்கிங்கையும் மஹிந்திரா நிறுத்திவிட்டது.
மேலும், உற்பத்தி நெருக்கடி காரணமாக ஏற்கனவே திட்டமிட்டபடி வெளிநாடுகளில் குறித்த நேரத்தில் புதிய எஸ்யூவி அறிமுகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வெளிநாடுகளில் புதிய எஸ்யூவி அறிமுகத்தை தள்ளிவைத்துள்ளது மஹிந்திரா.
அடுத்த ஆறு மாதங்களில் ஆஸ்திரேலியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்ய மஹிந்திரா திட்டமிட்டிருந்தது. ஆனால், இந்த புதிய முடிவு காரணமாக கூடுதலாக 3 மாதங்கள் வரை புதிய எஸ்யூவி அறிமுகம் தள்ளிப்போகலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








