அடுத்த ஆண்டு முதல் காம்பெக்ட் காரை அறிமுகப்படுத்தும் மஹிந்திரா

கடந்த ஆண்டு ரேவா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் பாதியளவு பங்குகளை மஹிந்திரா வாங்கியது. இதைத்தொடர்ந்து, ரேவா பிராண்டில் புதிய எலக்ட்ரிக் கார் மாடல்களை அறிமுகப்படுத்தும் பணிகளை மஹிந்திரா துரிதப்படுத்தியது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு தனது முதல் காம்பெக்ட் காரான ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் காரை மஹிந்திரா அறிமுகப்படு்த்துகிறது. இந்த புதிய கார் மாடல் பல்வேறு கூடுதல் சிறப்புகளுடன் வருகிறது.
கடந்த 2001ம் ஆண்டு ரேவா எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டாலும் எதிர்பார்த்த அளவு அது மார்க்கெட்டில் எடுபடவி்ல்லை. அதிக தூரம் செல்லமுடியாத பேட்டரி திறன், அதிக விலை, 2 பேர் பயணம் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ரேவா எலக்ட்ரிக் கார் விற்பனை வளர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில், இந்த அனைத்து குறைகளையும் களைந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் காரை வடிவமைத்துள்ளது மஹிந்திரா. புதிய ரேவா எலக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 160 கிமீ வரை செல்ல முடியும்.
4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லும் வசதியுடன் வரும் இந்த கார் அதிகபட்சம் மணிக்கு 100 கிமீ வேகம் வரை செல்லும். தவிர, 3 ரூபாய் செலவில் 9.6 கிமீ தூரம் செல்ல முடியும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த புதிய எலக்ட்ரிக் கார் 100 ரூபாய் செலவில் 320 கிமீ வரை செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பிற பெட்ரோல் மாடல் கார்களை ஒப்பிடும்போது 9 மடங்கு கூடுதல் மைலேஜ் தரும் காராக இருக்கும் என்றும் மஹிந்திரா கூறுகிறது.
இதுகுறித்து மஹிந்திரா ரேவா தொழில்நுட்ப பிரிவு தலைவர் சேத்தன் மெய்னி கூறியதாவது:
"பெட்ரோல் கார் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு ரூ.7,000 முதல் ரூ.8,000 வரை செலவு செய்கின்றனர். ஆனால், புதிதாக வர இருக்கும் ரேவா என்எக்ஸ்ஆர் எலக்ட்ரிக் கார் அவர்களின் மாத பட்ஜெட்டில் எரிபொருள் செலவை கணிசமாக மிச்சப்படுத்தும்.
பெட்ரோல் கார்களை ஒப்பிடும்போது ரேவா என்எக்ஸ்ஆர் 9 மடங்கு கூடுதல் மைலேஜை தரும். வரும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் மஹிந்திரா அரங்கில் இந்த புதிய கார் பார்வைக்க வைக்கப்பட உள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள 100 டீலர்கள் வழியாக இந்த காரை விற்பனை செய்யப்பட உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications








