இன்னும் 6 மாதங்களில் புதிய ரேவா பேட்டரி கார்: மஹிந்திரா அறிவிப்பு

இந்தியாவில் மஹிந்திரா ரேவா நிறுவனம் மட்டுமே பேட்டரி கார்களை தயாரித்து வருகிறது. அந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வரும் ரேவா பேட்டரி காரில் 2 பேர் மட்டுமே அமர்ந்து செல்ல முடியும் என்பதால் மார்க்கெட்டில் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், 4 பேர் அமர்ந்து செல்லும் வசதியுடன் புதிய ரேவா என்எக்ஸ்ஆர் பேட்டரி காரை அந்த நிறுவனம் தற்போது வடிவமைத்து வருகிறது. இந்த புதிய கார் வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ரேவா என்எக்ஸ்ஆர் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக யூக தகவல்கள் பரவி வந்த நிலையில், அந்த தகவல்களுக்கு மஹிந்திரா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. புதிய ரேவா என்எக்ஸ்ஆர் காரை இன்னும் 6 மாதங்களில் அறிமுகம் செய்ய இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மஹிந்திரா தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புப் பிரிவு நிர்வாக அதிகாரி ராஜன் வதேரா செய்திநிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
"புதிய ரேவா என்எக்ஸ்ஆர் பேட்டரி காரை வடிவமைக்கும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தற்போது முழுவீச்சில் சோதனைகளை நடத்தி வருகிறோம்.
வாடிக்கையாளர்களுக்கு தகுந்தவாறு குறைந்த விலையில் இந்த காரை அறிமுகப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடித்து வருகிறோம்.
ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிக தூரம் செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது. 4 பேர் தாராளமாக அமர்ந்து செல்லும் வகையிலும், அதிக பிக்கப் மற்றும் சாதாரண கார்களில் இருக்கும் வசதிகளுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அடுத்த 6 மாதங்களில் இந்த காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








