சென்னையில் யூஸ்டு கார்களுக்கான மஹிந்திராவின் புதிய ஷோரூம் திறப்பு

வாகன உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா நிறுவனம், மஹிந்திரா பர்ஸ்ட்சாய்ஸ் என்ற பெயரில் பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மஹிந்திராவின் பர்ஸ்ட்சாய்ஸ் யூஸ்டு கார் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன.
சென்னையிலும், மஹிந்திராவின் பர்ஸ்ட் சாய்ஸ் ஷோரூம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மற்றும் சர்வீஸ் ஸ்டேசன் ஒருங்கே அமையப்பெற்ற, 2எஸ் சூப்பர்ஸ்டோர் என்ற பிரம்மாண்ட புதிய ஷோரூமை சென்னையில் திறந்துள்ளது மஹிந்திரா நிறுவனம்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நெற்குன்றத்தில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம் திறப்பு விழா நேற்று நடந்தது. மஹிந்திரா குழுமத்தின் துணைத்தலைவரும், மேலாண் இயக்குனருமான ஆனந்த் மஹிந்திரா விழாவில் கலந்து கொண்டு ஷோரூமை திறந்து வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
"நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார் சந்தை, புதிய கார் சந்தைக்கு நிகராக வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே, வாடிக்கையாளர்களுக்கு தரமான, சிறந்த சர்வீஸ் வசதியை வழங்கும் விதத்தில் சென்னையில் புதிய செகன்ட் ஹேண்ட் கார் ஷோரூமை திறந்துள்ளோம்.
சென்னையில் மாதத்திற்கு 5,500 செகன்ட் ஹேண்ட் கார்கள் விற்பனையாகின்றன. நாங்கள் இந்த ஆண்டு சென்னையில் 10,000 கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். நாடு முழுவதும் 151மஹிந்திரா பர்ஸ்ட் சாய்ஸ் ஷோரூம்கள் உள்ளன.
இதில், 133 ஷோரூம்கள் பிரான்சீஸ் அடிப்படையில் செயல்படுகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பர்ஸ்ட்சாய்ஸ் ஷோரூம்களின் எண்ணிக்கையை 300 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். வாடிக்கையாளர்களுக்கு தரமான, நிறைவான சேவையை வழங்குவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications








