மீண்டும் ஜனவரியில் துவங்குகிறது மஹிந்திரா எக்ஸ்யூவிக்கு புக்கிங்

கடந்த செப்டம்பர் 29ந் தேதி எக்ஸ்யூவி 500 என்ற புத்தம் புதிய எஸ்யூவியை மஹிந்திரா மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. ஸ்டைல், சொகுசு உள்ளிட்ட அம்சங்களுடன் ரூ.10.85 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
குளோபல் பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய எஸ்யூவியை வெளிநாட்டு சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவித்த கையோடு, முதலில் தென் ஆப்ரிக்க சந்தையிலும் இந்த புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்தது மஹிந்திரா.
இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு 10 நாட்களில் இந்த புதிய எஸ்யூவி 8,000 புக்கிங்குகளை வாரி சுருட்டி மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மஹிந்திரா திட்டமிட்டு வைத்திருந்த உற்பத்தி இலக்கை தாண்டியதால், புதிய எஸ்யூவிக்கான புக்கிங்கை மஹிந்திரா திடீரென நிறுத்தியது.
இதனால், வாடிக்கையாளர் மத்தியில் சிறிது ஏமாற்றம் ஏற்பட்டது. புக்கிங் மீண்டும் எப்போது துவங்கப்படும் என்ற எதிர்பார்ப்போடு அவர்கள் காத்திருந்ததனர். இந்த நிலையில், அவர்களுக்கு ஒரு இனிப்பான செய்தியை வழங்கும் வகையில், புதிய எஸ்யூவிக்கான புக்கிங்கை வரும் ஜனவரியில் துவங்க இருப்பதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








