5 மாதங்களில் புக்கிங் செய்த ஸ்விப்ட் கார்கள் டெலிவிரி: மாருதி

கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட் கார் எதிர்பாராத வரவேற்பை பெற்றது. அந்த காரின் புக்கிங் ஒரு லட்சத்தை கடந்து சாதனை படைத்தது.
மேலும், ஸ்விப்ட் காருக்கான காத்திருப்பு காலம் நீண்டு கொண்டே சென்றது. இந்த நிலையில், ஸ்விப்ட் கார் உற்பத்தி செய்யப்படும் மானேசர் ஆலையில் தொழிலாளர் ஸ்ட்ரைக் காரணமாக ஸ்விப்ட் கார் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.
இதனால், ஸ்விப்ட் காரை புக்கிங் செய்து காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு குறி்த்த நேரத்தில் கார்களை டெலிவிரி கொடுக்க முடியாத நிலையில் மாருதி சிக்கியது. மேலும், ஸ்விப்ட் கார் புக்கிங்கையும் நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில், ஸ்விப்ட்டை புக்கிங் செய்த வாடிக்கையாளர்களும் கார் எப்போது டெலிவிரி கிடைக்கும் என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், மானேசர் ஆலை தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்து தற்போது ஸ்விப்ட் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
இருப்பினும், எகிடுதகிடான புக்கிங் எண்ணிக்கை இருப்பதால் கார் டெலிவிரிக்காக தொடர்ந்து வாடிக்கையாளர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்த நிலையில், ஸ்விப்ட் கார் டெலிவிரி குறித்து ஒரு வழியாக மாருதி தற்போது வாய் திறந்துள்ளது.
வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் புக்கிங் செய்யப்பட்டுள்ள அனைத்து ஸ்விப்ட் கார்களும் டெலிவிரி கொடுக்கப்பட்டு விடும் என்று மாருதி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாருதியின் உற்பத்தி பிரிவு நிர்வாக அதிகாரி எம்.எம்.சிங் கூறியதாவது:
"மாதத்திற்கு 18,000 முதல் 20,000 ஸ்விப்ட் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். மானசேர் ஆலையின் 2வது உற்பத்தி பிரிவிலும் ஸ்விப்ட் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி மாதத்தில் இந்த உற்பத்தி பிரிவிலும் முழு அளவில் ஸ்விப்ட் கார்கள் உற்பத்தி செய்யப்படும். எனவே, வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் புக்கிங் செய்யப்பட்ட அனைத்து ஸ்விப்ட் கார்களும் டெலிவிரி கொடுக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








