தொழிலாளர் பிரச்னை: 3 நாட்களுக்கு ஆலையை இழுத்து மூடியது மாருதி

மானேசர் ஆலையை சேர்ந்த சூப்பர்வைசர்கள் மீது ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், 5 சூப்பர்வைசர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நிலைமையை சமாளிக்கும் விதமாக மானேசர் கார் ஆலையில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கார் உற்பத்தியை நிறுத்தியுள்ளது மாருதி. வரும் திங்கட்கிழமை வழக்கம்போல் கார் உற்பத்தி துவங்கும் என மாருதி தெரிவித்துள்ளது. இதனால், மாருதிக்கு கார் உற்பத்தியில் மேலும் கடுமையான இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.
சூப்பர்வைசர்கள் தாக்குதல் குறித்து மாருதி வெளியிட்ட அறிக்கையில்,"பணிக்கு வரும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் இதுபோன்று வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்," என்று கூறியுள்ளது.
இதனிடையே, மாருதி தொழிலாளர் பிரச்னைக்கு நேரில் சென்று சமரச முயற்சிகளை மேற்கொள்ள இருப்பதாகவும், விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என்றும் ஹரியானா மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஷிவ் சரண் லால் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications