கான்செப்ட் மாடல் எஸ்யூவியை அறிமுகப்படுத்தும் மாருதி

அனைத்து ரக கார்களையும் கையில் வைத்துள்ள நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதிக்கு எஸ்யூவி மாடல் கையில் இல்லை.
இந்த நிலையில், எஸ்யூவி மார்க்கெட் கணிசமாக வளர்ந்து வருகிறது.
இதனால், மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ் போன்ற உள்நாட்டு நிறுவனங்களும் ஏராளமான அயல்நாட்டு நிறுவனங்களும் புதிய எஸ்யூவி மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றன.
எஸ்யூவி மாடல் கையில் இல்லாததால் மாருதிக்கு அந்த மார்க்கெட்டில் விற்பனை இழப்பு ஏற்பட்டு வருவதாக கருதுகிறது.
இதையடுத்து, புத்தம் புதிய எஸ்யூவியை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது.
இதற்காக, வரும் ஜனவரி மாதம் டெல்லியில் நடைபெற உள்ள ஆட்டோ கண்காட்சியில் கான்செப்ட் மாடல் எஸ்யூவியை அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்த எஸ்யூவியை வரும் 2013ம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2014ம் ஆண்டிலோ வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி கணக்கு போட்டுள்ளது.
இதுகுறித்து மாருதி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்," கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி மார்க்கெட் நன்கு வளர்ந்து வருகிறது. எனவே, அந்த செக்மெண்ட்டில் எங்களது பங்களிப்பு இல்லாதது குறையாக உள்ளது.
இந்த குறையை போக்கும் வகையில் புதிய கான்செப்ட் மாடல் எஸ்யூவியை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் காட்சிக்கு வைக்க உள்ளோம்.
இந்த எஸ்யூவியின் எஞ்சின், வடிவமைப்பு குறித்தும், இந்தியாவில் வடிவமைப்பதா அல்லது ஜப்பானில் உள்ள சுஸுகி வடிவமைப்பு மையத்தில் வடிவமைப்பதாக என்பது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரைவில் ஆய்வு செய்ய உள்ளோம். குறைந்த இன்னும் ஓரிரு ஆண்டுகளிலாவது புதிய எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர விரும்புகிறோம்," என்றார்.
மார்க்கெட்டில் மாருதியின் பிராண்டு பெயருக்கு வாடிக்கையாளர் மத்தியில் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது. இந்த நிலையில், சரியான விலையில் தரமான எஸ்யூவியை அறிமுகம் செய்தால் நிச்சயம் அது மஹிந்திரா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களின் விற்பனையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.


Click it and Unblock the Notifications








