பிப்ரவரியில் குட்டி டிசையரை அறிமுகப்படுத்த மாருதி திட்டம்

என்ட்ரி லெவல் என்று கூறப்படும் ஆரம்ப நிலை செடான் கார் மார்க்கெட்டில் மாருதியின் ஸ்விப்ட் டிசையர் அதிகம் விற்பனையாகும் மாடலாக திகழ்கிறது. கடந்த நவம்பரில் மட்டும் 10,403 ஸ்விப்ட் டிசையர் கார்கள் விற்பனையாகியுள்ளது.
இது மாருதியின் மொத்த விற்பனையில் 13 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்விப்ட் டிசையரும், ஸ்விப்ட் ஹேட்ச்பேக் காரும் ஒரே பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டவை. இந்த நிலையில், இதே பிளாட்பார்மில் மூன்றாவது மாடலையும் மாருதி வடிவமைத்துள்ளது.
வரிச்சலுகை பெறும் விதத்தில் ஸ்விப்ட் டிசையரை 4 மீட்டருக்கும் குறைவாக வடிவமைத்துள்ளது மாருதி. டிசையரின் பின்புறத்தின் நீளத்தை குறைத்து இந்த புதிய ஸ்விப்ட் டிசையர் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசையர் 3.99 என்ற பெயரில் புதிய டிசையர் கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வரும் பிப்ரவரியில் புதிய குட்டி டிசையரை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, புதிய டிசையரின் சோதனை கட்ட உற்பத்தியையும் துவங்கப்பட்டுள்ளதாக மாருதி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், நீளம் குறைக்கப்பட்ட புதிய டிசையர் விற்பனைக்கு வந்தாலும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்விப்ட் டிசையரும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டிசையரை விட புதிய டிசையர் ரூ.50,000 விலை குறைவாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








