ஹரியானா அரசு சமரசம்: மாருதி தொழிலாளர் ஸ்ட்ரைக் வாபஸ்

இந்த ஸ்ட்ரைக் தொடர்பாக மாருதி நிர்வாகத்துக்கும், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள மானேசர் ஆலை தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இந்த நிலையில், ஹரியானா தொழிலாளர் நலத்துறை துணைக்கமிஷனர் ஜே.பி.மான், உதவிக்கமிஷனர் நிதின் யாதவ் மற்றும் குர்கான் தொழிலாளர் துறை கமிஷனர் பி.சி.மீனா ஆகியோர் முன்னிலையில் நேற்று குர்கானில் பேச்சுவார்த்தை நடந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் ஹரியானா தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவ் சரண் லால் சர்மாவும் பின்னர் கலந்துகொண்டார். இந்த பேச்சுவார்த்தையில் நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது.
ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 18 பயிற்சி தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்வதாக மாருதி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இதேபோன்று, நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்திடுவதாக தொழிலாளர்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 29ந் தேதி முதல் ஒரு மாதகாலம் நீடித்து வந்த வேலைநிறுத்த போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது. அதேவேளை, பணிநீக்கம் செய்யப்பட்ட 48 நிரந்தர தொழிலாளர்கள் மீது சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது.
மேலும், இந்த பேச்சுவார்த்தையில் வேலைநிறுத்த காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்றும் மாருதி தெரிவித்துள்ளது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதையடுத்து, மானேசரிலுள்ள மாருதி ஆலையில் கார் உற்பத்தி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








