ஸ்ட்ரைக் எதிரொலி: யூஸ்டு கார் மார்க்கெட்டில் மாருதி கார்களுக்கு கிராக்கி

மாருதி தொழிலாளர்களின் காலவரையற்ற ஸ்ட்ரைக் மார்க்கெட்டில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ட்ரைக்கால் மாருதி நிறுவனம் ஒரு பக்கம் இழப்பை சந்தித்து வந்தாலும், மறுபக்கம் வாடிக்கையாளர்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
குறைந்த பராமரிப்பு செலவு, தகுந்த விலை, பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க், அதிக மைலேஜ் உள்ளிட்ட காரணங்களால் ஏராளமான வாடிக்கையாளர்கள் கார் வாங்கும்போது மாருதி கார்களையே தேர்வு செய்ய விரும்புகின்றனர்.
மேலும், யூஸ்டு கார் சந்தையிலும் மாருதி கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால் தங்களது கார் மதிப்பு குறையாது என்பது வாடிக்கையாளர்களின் எண்ணம். இந்த நிலையில், மாருதி ஆலை தொழிலாளர்களின் ஸ்ட்ரைக் காரணமாக மாருதி கார்களை புக்கிங் செய்வதிலிருந்து வாடிக்கையாளர்களும் பின் வாங்கி வருகின்றனர்.
புக்கிங் செய்த வாடிக்கையாளர்களும் மாதக்கணக்கில் காத்திருந்தாலும், முன்னே வைத்த காலை பின்னே வைக்க மனமில்லாமல் தவித்து வருகின்றனர். மாருதி கார்களுக்கு உள்ள மார்க்கெட் மதிப்பு அவர்களை பிற நிறுவனங்களின் கார்களை வாங்குவதற்கு தூண்டவில்லை.
இந்த நிலையில், யூஸ்டு மாருதி கார்கள் பக்கம் வாடிக்கையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. இதனால், யூஸ்டு கார் மார்க்கெட்டில் மாருதி கார்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. குறிப்பாக,ஆல்ட்டோ மற்றும் ஸ்விப்ட் காருக்கு யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிக கிராக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் எதிரொலியால் மாருதி யூஸ்டு கார்களின் விலை திடீரென உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆட்டோ வட்டார தெரிவிக்கின்றன.
யூஸ்டு கார் மார்க்கெட்டில் மாருதி கார்களுக்கு கிராக்கி அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் புதிய மாருதி கார்களுக்கான மிரள வைக்கும் காத்திருப்பு காலம்தான் என்று ஆட்டோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








