தொழிலாளர்கள் மீண்டும் ஸ்ட்ரைக்: ஆலைகளை இழுத்து மூட மாருதி முடிவு?

மேலும், மாருதி கார்களுக்கு எஞ்சின் தயாரிக்கும் மானேசரிலுள்ள சுஸுகி பவர் ட்ரெயின் ஆலை தொழிலாளர்களும் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள மாருதி, நிலைமை சீராகும் வரை தனது அனைத்து ஆலைகளையும் காலவரையின்றி இழுத்து மூடுவது குறித்து பரிசீலித்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் முதல் மானேசரிலுள்ள மாருதி ஆலை தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் மோதல் நீடித்து வருகிறது. தொழிலாளர்கள் அடிக்கடி ஸ்ட்ரைக்கில் குதிப்பதால் அந்த நிறுவனத்துக்கு கார் உற்பத்தியில் கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 29ந் தேதி முதல் ஒரு மாதம் நடந்து வந்த ஸ்ட்ரைக் ஒருவழியாக கடந்த 1 ந்தேதிதான் முடிவுக்கு வந்தநிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியமர்த்த கோரி கடந்த 7 ந் தேதி முதல் மானேசர் ஆலை தொழிலாளர்கள் மீண்டும் ஸ்ட்ரைக்கில் குதித்த்துள்ளனர்.
இதனால், மாருதி நிறுவனத்துக்கு கார் உற்பத்தியில் மீண்டும் கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் அவ்வப்போது வன்முறையில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முயன்ற 450 தொழிலாளர்களை சிறை பிடித்து வைத்திருந்ததாகவும், அவர்களை நேற்று மீட்டதாகவும் மாருதி தெரிவித்துள்ளது.
மேலும், பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருக்கும் போலீசார் மீது ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் மாருதி தெரிவித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அதேபகுதியில் அமைந்துள்ள சுஸுகி பவர்ட்ரெயின் ஆலையை சேர்ந்த தொழிலாளர்களும் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆலையில்தான் மாருதி கார்களுக்கான கே-சீரிஸ் எஞ்சின்கள் தயாரிக்கப்படுகின்றன.
கார்களுக்கான எஞ்சின் சப்ளை முற்றிலும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் குர்கானிலுள்ள 3 மாருதி ஆலைகளிலும் கார் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிலாளர் பிரச்னையால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கும் மாருதி, மானேசர் மற்றும் குர்கான் ஆலைகளில் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட்டு நிலைமை சீராகும் வரை ஆலைகளை இழுத்து மூட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி நிறுவனம் தனது அனைத்து ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தினால் கார் டெலிவிரியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், புக்கிங் செய்து காத்து கிடக்கும் வாடிக்கையாளர்கள் மாருதியை விட்டு வேறு நிறுவனங்களின் காரை வாங்குவதற்கு முடிவு செய்யலாம். இதனால், பல விதத்திலும் கடும் இழப்பை சந்திக்க நேரிடும் சூழ்நிலையை மாருதி எதிர்நோக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








