புதிதாக 20 கார் மாடல்களை அறிமுகப்படுத்த மாருதி திட்டம்

நாட்டின் கார் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாருதி நிறுவனம், மார்க்கெட்டில் 50 சதவீத கார் விற்பனையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆனால், இந்திய சந்தையில் பன்னாட்டு கார் நிறுவனங்கள் களமிறங்கி வருவதால், மார்க்கெட் பங்களிப்பை தக்கவைத்துக்கொள்வதில் மாருதிக்கு கடும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மார்க்கெட்டில் நிலைத்து நிற்க புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 20 கார் மாடல்களை களமிறக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில், புத்தம் புதிய மாடல்கள் தவிர, பழைய கார்களை மறுவடிவமைப்பு செய்தும் அறிமுகப்படுத்தப்படும்.
புதிய கார் மாடல்களில் 75 முதல் 80 சதவீத கார்கள் சிறிய கார் ரகத்தை சேர்ந்ததாக இருக்கும். புதிய கார் மாடல்களை உருவாக்குவதற்கான பணிகளை மாருதி ஏற்கனவே துவங்கிவிட்டது. புதிய கார் மாடல்களில் 5 மாடல்களை வடிவமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது.
ரோத்டாக்கில் உள்ள தனது கார் வடிவமைப்பு மற்றும் ஆய்வு மையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வருகிறது மாருதி நிறுவனம். இதற்காக ரூ.1,000 கோடி முதல் ரூ.1,500 கோடி வரை முதலீடு செய்கிறது மாருதி.
இந்த நிலையில், அளவில் குறைக்கப்பட்ட புதிய டிசையர் செடான் கார், ஆர்-3 எம்யூவி கார், மேம்படுத்தப்பட்ட ஏ-ஸ்டார் மற்றும் ரிட்ஸ் தவிர, ஆல்ட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய 800 கார்கள் ஆகியவற்றை முதல்கட்டமாக அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








