சந்தை போட்டி:ஆராய்ச்சி பணிகளுக்கு கூடுதல் நிதி-மாருதி

நாட்டின் கார் விற்பனையில் பாதியளவுக்கு பிடித்துக்கொண்டுள்ள மாருதி நீண்ட காலமாக சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. ஆனால், இனி அந்த இடத்தை தக்கவைக்க மாருதி பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இந்திய சந்தையின் நாடித்துடிப்பை அறிந்துகொண்ட உலக ஜாம்பவான் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய சந்தைக்கு தக்கவாறு சிறிய கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால், சிறிய கார் சந்தையில் தனிக்காட்டு ராஜாவாக இருந்து வரும் மாருதிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த போட்டிகளை சமாளித்து நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக்கொள்ள பல புதிய வியூகங்களை அந்நிறுவனம் வகுத்துள்ளது. இதன்படி, அடுத்தடுத்து புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள மாருதி கார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாருதி தலைமை நிதி அதிகாரி அஜய் சேத் கூறியதாவது:
"புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணிகளை துரிதப்படுத்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் .
தற்போது மொத்த விற்பனை வருவாயில் 1.1 சதவீதம் ஆராய்ச்சி பணிகளுக்கு செலவிடப்படுகிறது. இதை, 1.4 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளோம். மேலும், வருவாயை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளோம். மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தும் நீண்டகால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








