ஸ்ட்ரைக் எதிரொலி: குர்கான் ஆலையில் ஸ்விப்ட் உற்பத்தி

ஹரியானா மாநிலம், மானேசரிலுள்ள மாருதி ஆலை தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையிலான பிரச்னை தீர்வு ஏற்படுவதற்கான அறிகுறியே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 12 நாட்களாக அங்கு ஸ்ட்ரைக் நீடிக்கிறது.
இதனால், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட் கார் உற்பத்தி அங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக தொழிலாளர்களை நியமித்து மானேசர் ஆலையில் ஸ்விப்ட் கார் உற்பத்தியை மாருதி துவங்கிது. இருப்பினும், சொற்ப எண்ணிக்கையிலேயே ஸ்விப்ட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஸ்விப்ட் காருக்கான காத்திருப்பு காலம் 8 மாதங்கள் வரை நீடிக்கும் என தெரிகிறது. இதனால், புக்கிங் செய்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
நெருக்கடியை சமாளிக்கும் விதமாக புதிய ஸ்விப்ட் காருக்கான புக்கிங்கை மாருதி தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மேலும், மானேசர் ஆலை உற்பத்தி இழப்பை சமாளிக்கும் விதமாக குர்கான் ஆலையிலும் புதிய ஸ்விப்ட் கார் உற்பத்தியை துவங்கியுள்ளது மாருதி.
மானேசர் ஆலையில் தற்காலிக தொழிலாளர்கள் மூலம் நேற்று 250 ஸ்விப்ட் கார்களை மாருதி உற்பத்தி செய்தது. இந்த நிலையில், குர்கான் ஆலையிலும் ஸ்விப்ட் கார் உற்பத்தி செய்யப்படுவதால், உற்பத்தி இழப்பை ஓரளவு சரிகட்ட முடியும் என்று மாருதி நம்புகிறது.
இருப்பினும், முழுவீச்சில் கார் உற்பத்தி துவங்கினால்தான் ஸ்விப்ட் கார் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு எப்போது கார் கையில் கிடைக்கும் என்பது உறுதியாகும்.


Click it and Unblock the Notifications








