12 ஆண்டுகளில் 10 லட்சம்: விற்பனையில் மாருதி வேகன்-ஆர் சாதனை

கடந்த 1999ம் ஆண்டு வேகன்-ஆர் காரை மாருதி அறிமுகம் செய்தது. பின்னர் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வேகன்-ஆர் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த ஆண்டு வேகன்-ஆர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை மாருதி அறிமுகம் செய்தது.
அறிமுகம் செய்யப்பட்ட நாள்முதல் விற்பனையில் வேகன்-ஆர் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காரான ஆல்ட்டோவுக்கு அடுத்து இடத்தில் வேகன்-ஆர் உள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 1.63 லட்சம் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்தது வேகன்-ஆர்.
இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு 12 ஆண்டுகளில் விற்பனையில் 10 லட்சத்தை கடந்து வேகன்-ஆர் புதிய சாதனை படைத்துள்ளது. மாருதி 800, ஆல்ட்டோ, ஆம்னிக்கு அடுத்து இந்த சாதனையை படைக்கும் மாருதியின் நான்காவது மாடல் என்ற பெருமையை வேகன்-ஆர் பெற்றுள்ளது.
இதுகுறித்து மாருதியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைமை பொது மேலாளர் சஷாங்க் வத்சவா கூறுகையில்," இது பெருமைமிக்க தருணமாக கருதுகிறோம். வேகன்-ஆர் விற்பனையில் மேலும் பல புதிய மைல்கற்களை எட்டும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








