மாருதி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்:கார் உற்பத்தி பாதிப்பு

ஹரியானா மாநிலம், மானேசரில் ரூ.3,625 கோடியில் மாருதி நிறுவனம் புதிய கார் தொழிற்சாலையை கட்டியுள்ளது. சமீபத்தில் உற்பத்தியை துவங்கிய இந்த தொழிற்சாலையில் 2,500 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த நிலையில், மானேசர் தொழிற்சாலையை சேர்ந்த தொழிலாளர்கள் மாருதி சுஸுகி எம்ப்ளாயீஸ் யூனியன் (எம்எஸ்இயூ)என்ற பெயரில் புதிய தொழிற்சங்கத்தை துவங்கியுள்ளனர். ஆனால், இதற்கு மாருதி நிர்வாகம் அனுமதி தரவில்லை என்று தெரிகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் தர வலியுறுத்தியும் மானேசர் தொழிற்சாலையை சேர்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை முதல் திடீர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால், அந்த தொழிற்சாலையில் கார் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் ஒருவர் கூறுகையில்,"குர்கானில் உள்ள தொழிற்சாலையில் செயல்படும் பழைய தொழிற்சங்கத்தின் கீழ் எங்களை செயல்படுமாறு எங்களிடம் நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக எழுதி தர வற்புறுத்துகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் தர வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்," என்றார்.
தொழிலாளர்களுடன் மிகுந்த நட்பு பாராட்டி வருவதாக கூறிவரும் மாருதி நிறுவனத்தின் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது அந்த நிறுவனத்துக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கடந்த சனிக்கிழமை மட்டும் சுமார் 650 கார்களின் உற்பத்தியில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும், மாருதி நிர்வாகத்துக்கும் இடையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








