தொழிலாளர் வேலைநிறுத்தம்:மாருதிக்கு 5,200 கார்கள் உற்பத்தி இழப்பு

புதிய தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் தரவேண்டி ஹரியானா மாநிலம், மானேசரில் உள்ள மாருதி கார் தொழிற்சாலையை சேர்ந்த 2,000 தொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டத்தை சட்டவிரோதமாக நடத்தி வருவதாக கூறி புதிய தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட 11 தொழிலாளர்களை மாருதி அதிரடியாக பணிநீக்கம் செய்தது. தொழிலாளர்களின் கோரிக்கையையும் ஏற்கமுடியாது என பிடிவாதமாக கூறிவருகிறது.
இருதரப்பும் நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துவிட்டன. இந்த நிலையில், கோரிக்கையை ஏற்று, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என மாருதி தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கடந்த ஆறு நாட்களில் மாருதி நிறுவனத்துக்கு 5,200 கார்களின் உற்பத்தியில் பாதிப்பும், ரூ.180 கோடி வரை வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளதாக மாருதி வட்டாரங்கள் தெரிவி்த்தன.
இந்த நிலையில், மானேசர் மாருதி தொழிற்சாலை வாயிலில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக அந்த பகுதியில் உள்ள ஹீரோ ஹோண்டா, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ரிக்கோ ஆட்டோ தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்களும் பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், மாருதி நிர்வாகம் கோரிக்கையை ஏற்காவிட்டால், அந்த பகுதியில் உள்ள 20 தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் குதிக்கப்போவதாக எச்சரித்துள்ளனர். இதனால், அந்த வட்டாரத்தில் பரபரப்பு நிலவுவதோடு, வாகன உற்பத்தி கடும் பாதிப்பை சந்திக்கும் சூழல் உருவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications








