புகாட்டி வேரோனுக்கு போட்டியாக புதிய ஹைப்பர் கார்: மெக்லேரன் தீவிரம்

உலகின் அதிவேகமாக செல்லும் கார் என்ற பெருமையை வோக்ஸ்வேகனின் துணை நிறுவனமான புகாட்டி நிறுவனத்தின் வேரோன் சூப்பர் கார் தக்கவைத்து வருகிறது. இந்த கார் மணிக்கு சோதனை ஓட்டத்தின்போது அதிகபட்சம் 434 கிமீ வேகத்தில் சென்று பிரமிக்க வைத்தது.
மேலும், கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. டீகேட் என்று கூறப்படும் கடந்த பத்தாண்டுகளின்(2000 முதல் 2009ம் ஆண்டு வரை) சிறந்த கார் என்ற பட்டத்தையும் வேரோனுக்கு பிபிசி செய்தி நிறுவனம் வழங்கியது. புகாட்டி வேரியோன் கார் ரூ.16 கோடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதில் வேடிக்கையான விஷயம் ரூ.16 கோடி என்ற விலை நிர்ணயித்தும், புகாட்டி வேரோன் கார் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக வோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்,பார்முலா 1 பந்தயங்களுக்கான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்கும் மெக்லேரன் புகாட்டி வேரியோனுக்கு போட்டியாக புதிய ஹைப்பர் காரை தயாரித்து வருகிறது. இந்த கார் வெறும் 3 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் கொண்டதாக இருக்கும்.
மெகா மேக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைப்பர் காரில் 5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் 800 பிஎச்பி ஆற்றலையும், 600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், கார்பன் பைபர் கொண்டு வடிவமைக்கப்படுவதால் இலகு எடையுடன் அதிக உறுதித்தன்மை கொண்டதாக இருக்கும்.
மேலும், இந்த கார் லிமிடேட் எடிசன் காராக வரும் என்று மெக்லேரன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தமே 500 கார்களை மட்டும் உற்பத்தி செய்ய மெக்லேரன் முடிவு செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








