மைக்ரா விலையை ரூ.11,170 வரை உயர்த்தியது நிசான்

முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்வால், கார் தயாரிப்பதற்கான உற்பத்தி செலவீனம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதையடுத்து, கார்களின் விலையை பல முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளன.
இந்நிலையில், மைக்ரா காரின் விலையை2 சதவீதம் உயர்த்தியுள்ளது நிசான் நிறுவனம். ரூ.4.06 லட்சமாக இருந்த மைக்ரா பெட்ரோல் காரின் விலை ரூ.4.36 லட்சம் வரையிலும், ரூ.5.59 லட்சமாக இருந்த டீசல் மாடலின் விலை ரூ.6.05 லட்சம் வரையிலும், மாடலுக்கு தக்கவாறு ரூ. 2,500 முதல் ரூ.11,170 வரை உயர்ந்துள்ளது.
அதேவேளை, எக்ஸ்டிரயல் எஸ்.யூ.வீ., டீனா சொகுசு செடான் மற்றும் 370இசட் ஆகிய இறக்குமதி ரக கார்களின் விலையை நிசான் உயர்த்தவில்லை.
இதுகுறித்து நிசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில்,"மைக்ராவின் உற்பத்தி செலவு கடுமையாக அதிகரித்ததையடுத்து, கார்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டோம்," என்று கூறினார்.
ஏற்கனவே விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ள மாருதி,டாடா மோட்டார்ஸ், டொயோட்டோ வரிசையில் நிசானும் இணைந்து கொண்டுள்ளது. கார்களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது, கார் வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








