மும்பையில் மாருதி காரில் தீ: எக்ஸ்பிரஸ் சாலையில் பரபரப்பு

அவுரங்காபாத்திலிருந்து மும்பைக்கு மாருதி ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்று இன்று காலை வந்துகொண்டிருந்தது. மும்பை, விக்ரோலி எக்ஸ்பிரஸ் சாலையில் அந்த கார் வந்தபோது, காரின் எஞ்சினிலிருந்து திடீரென புகை வந்துள்ளது.
இதை கவனித்துவிட்ட டிரைவர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அதிலிருந்து அவசரமாக இறங்கினார். அடுத்த வினாடியே அந்த கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் அந்த கார் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.
இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதுகுறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீப்பற்றி எரிந்த ஸ்விப்ட் டிசையர் கார் வாங்கி 3 மாதங்கள்தான் ஆகிறது என அந்த காரை ஓட்டிவந்தவர் தெரிவித்தார். காரில் வேறு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
எஞ்சின் அதிக சூடானதால் காரில் தீப்பற்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், தீப்பிடித்ததற்கான முழு காரணம் தெரியவில்லை.
போக்குவரத்து மிகுந்த விக்ரோலி எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை நடந்த இச்சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
டாடா நானோ கார்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வரும் நிலையில், மாருதி ஸ்விப்ட் டிசையர் காரும் தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications