விற்பனையில் வேகன்ஆரை வீழ்த்த வரும் புதிய ஸ்விப்ட்

வரும் ஆகஸ்ட் 17ந் தேதி புதிய ஸ்விப்ட் கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதுவரை எந்த காரும் கண்டிராத ஆரவாரமான வரவேற்பை புதிய ஸ்விப்ட் பெற்றுள்ளது. முறைப்படி அறிமுகம் செய்வதற்கு முன்னரே இதுவரை 40,000க்கு மேல் புதிய ஸ்விப்ட் கார்கள் புக்கிங் செய்யப்பட்டு மிரள வைத்துள்ளது.
இந்த நிலையி்ல், கார் விற்பனையில் நீண்ட காலமாக அசையாமல் இரண்டாம் இடத்தில் ஆசனம் போட்டு ஹாயாக அமர்ந்திருக்கும் வேகன்-ஆர் காரை பின்னுக்கு தள்ளி புதிய ஸ்விப்ட் அந்த இடத்தை பிடிக்கும் என ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கார் மார்க்கெட்டில் மாருதியின் ஆல்ட்டோ மற்றும் வேகன்-ஆர் கார்கள் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ளன. மாதந்தோறும் சராசரியாக 34,000 ஆல்ட்டோ கார்களும், 18,000 வேகன்-ஆர் கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதைத்தொடர்ந்து, ஸ்விப்ட் கார் இடம்பிடித்திருந்தது. மாதத்திற்கு சராசரியாக 12,000 கார்கள் விற்பனையாகி வந்தன. மற்ற நிறுவனங்களின் கார்கள் இவைகளுக்கு அடுத்த இடத்தில்தான் இருக்கின்றன.
இந்த நிலையில், புதிய ஸ்விப்ட் அறிமுகமானவுடன் விற்பனை கணிசமாக உயரும் என்று மாருதி மார்க்கெட்டிங் பிரிவு பொது மேலாளர் சஷாங்க் வத்சவா கூறியுள்ளார்.
புதிய ஸ்விப்ட் காருக்கு தேவை அதிகரிக்கும் என்பதை கணித்த மாருதி தனது டிசையர் செடான் காரின் உற்பத்தியை மானேசரில் இருந்து குர்கான் ஆலைக்கு மாற்றியது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








