ரூ.5.78 லட்சத்தில் புதிய சன்னியை அறிமுகப்படுத்தியது நிசான்

மைக்ரா ஹேட்ச்பேக் கார் மூலம் இந்திய சந்தையில் நிசான் நிறுவனம் நன்மதிப்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, தனது சன்னி செடான் காரை கடந்த மாதம் இந்திய சந்தைக்கு அறிமுகப்படுத்தியது.
மேலும் சென்னையிலுள்ள தனது ஆலையில் சன்னி கார் உற்பத்தியையும் சமீபத்தில் நிசான் துவங்கியது. இந்த நிலையில், சொக்க வைக்கும் அழகுடன் கூடிய தனது சன்னியை இன்று வர்த்தக ரீதியில் களமிறக்கியது நிசான்.
தாராள இடவசதியுடன் மற்ற செடான் கார்களிலிடமிருந்து வேறுபட்டு தெரியும் புதுமையான வடிவமைப்புடன் சன்னி வந்துள்ளது. தற்போது பெட்ரோல் மாடல் சன்னி மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
இதில், 99 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் டீசல் கார்களுக்கு அதிக கிராக்கி இருப்பதை கருத்திக்கொண்டு இந்த ஆண்டு இறுதிக்குள் டீசல் மாடல் காரையும் அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது.
மாருதி எஸ்எக்ஸ்-4, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, வோக்ஸ்வேகன் வென்ட்டோ, போர்டு பியஸ்ட்டா, பியட் லீனியா ஆகிய மிட்சைஸ் செடான் கார்களின் வரிசையில் நிசான் சன்னியும் இணைந்துள்ளது.
மார்க்கெட்டில் சிறிய ரக ஹேட்ச்பேக் கார்கள் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.6.5 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், மிட்சைஸ் செடான் ரகத்தை சேர்ந்த சன்னியை மிக குறைந்த விலையில் களமிறக்கி வாடிக்கையாளர்களையும், ஆட்டோத்துறையினருக்கும் திரும்பி பார்க்கவைத்துள்ளது நிசான்.
பவர் ஸ்டீயரிங், டிரைவர் பக்க ஏர்பேக்ஸ், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் நிசான் சன்னியில் ஸ்டாண்டர்டு ஆக்ஸ்செரீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தாராள இடவசதியுடன், நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த சன்னி குறைந்த விலையில் மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளதால் மிட்சைஸ் கார்களுக்கு மட்டுமின்றி, ஹேட்ச்பேக் கார்களுக்கும் கடும் போட்டியை கொடுக்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








