நிசான் சன்னி செடான் கார்- ஓர் முழுமையான அலசல்

கடந்த 1961ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சன்னி அவ்வப்போது வடிவமைப்பு மற்றும் வசதிகளில் மாற்றங்களுடன் தற்போது 10 வது தலைமுறையை எட்டியுள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 10ம் தலைமுறை சன்னி கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஆட்டோ ஷோவில் இந்த சன்னி அறிமுகம் செய்யப்பட்டது.
உலகின் பல்வேறு நாடுகளில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள சன்னியை, மிகுந்த எதிர்பார்ப்புடன் நிசான் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. குறைந்த விலையில் பெரிய மிட்சைஸ் கார் என்ற அஸ்திரத்துடன், வாடிக்கையாளர்களின் விருப்ப பட்டியலில் சன்னியும் இணைந்துகொண்டுள்ளது.
சன்னியில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களின் பற்றி இங்கே காணலாம்.
எஞ்சின்:
சன்னியில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 6,000 ஆர்பிஎம்மில் 98 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை கொண்டுள்ளது. நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு போதுமான ஆற்றலை இந்த எஞ்சின் வழங்குகிறது. இருந்தாலும், நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது சற்று ஆற்றல் குறைவாக தெரிகிறது.
வெளிப்புற வடிவமைப்பு:
புதுமையான ஹெட்லைட், குரோம் பூச்சுடன் முன்பக்க கிரில்கள் சன்னியின் கவர்ச்சியை கூட்டியுள்ளது. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது இதன் கூரை மெதுவாக உயரத்துவங்கி அழகாக முன்பக்கத்தில் இறங்கும் வடிவமைப்பு மற்ற மிட்சைஸ் செடான் கார்களிலிருந்து சன்னியை வேறுப்படுத்துகிறது.
உட்புற வடிவமைப்பு:
சன்னியின் கேபின் சொகுசு கார்களை நினைவுப்படுத்துகிறது. டேஷ்போர்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில், ஸ்விட்சுகள், ஏசி வென்ட் ஆகியவை சரியான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் ஸ்விட்சுகள் இருக்கின்றன. முன்னிருக்கைகள் வசதியாக இருக்கின்றன. பின்னிருக்கைகள் குறித்து நாம் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.
6 அடி உயரம் கொண்டவர்கூட பின்னிருக்கையில் உட்கார்ந்தாலும் கால்களை நன்கு நீட்டி மடக்கி உட்கார முடிகிறது. இதில், ஓஇஎம் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டிக்கிறது. இருந்தாலும், யூஎஸ்பி இன்புட் வசதி இல்லாதது பெரும் குறையாக தெரிகிறது. டிக்கியை மேனுவலாக திறக்க டிரைவர் இருக்கைக்கு கீழே பூட் ஓபன் லிவர் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 490 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிக்கி பொருட்களை வைத்து எடுப்பதற்கு வசதியானதாக இருக்கிறது.
சொகுசு மற்றும் கையாளுமை:
இருக்கைகள் சன்னியை சொகுசு கார் வரிசையில் சேர்த்துவிடும் போலிருக்கிறது. தரமாகவும், மிருதுவாகவும் இருப்பதாலும், தொடைக்கு நல்ல சப்போர்ட் தருவதாலும் நீண்ட நேரம் பயணம் செய்தாலும் அலுப்பிருக்காது. தோற்றத்தில் பெரிய காராக இருந்தாலும் நகர்ப்புறங்களில் ஓட்டும்போது மிக அனாயசமாக செல்கிறது. மேலும், நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும்போதும் அச்சத்தை ஏற்படுத்தவில்லை.
பாதுகாப்பு:
எக்ஸ்எல், எக்ஸ்வி ஆகிய வேரியண்ட்களில் ஏர்பேக்குகள் ஸ்டான்டர்டு அம்சம். தவிர, ஏபிஎஸ், கீலெஸ் என்ட்ரி, பவர் ஸ்டீயரிங், சைல்டு லாக் உள்ளிட்ட வசதிகளும் பொதுவாக அனைத்து வேரியண்ட்களிலும் இருக்கிறது. ஸ்டார்ட் ஸ்டாப் பட்டனும் தொழில்நுட்பத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
மைலேஜ்:
நதர்ப்புறங்களில் ஓட்டும்போது லிட்டருக்கு 12 கிமீ தொலைவும், நெடுஞ்சாலைகளில் செல்லும்போது லிட்டருக்கு 16 கிமீ மைலேஜையும் சன்னி கொடுக்கிறது.
விலை:
சன்னி எக்ஸ்இ: ரூ.5.78 லட்சம்(எக்ஸ்ஷோரூம்) விலையிலும், சன்னி எக்ஸ்எல்: ரூ.6.88 லட்சம்(எக்ஸ்ஷோரூம்) விலையிலும், சன்னி எக்ஸ்வி: ரூ.7.68 லட்சம்(எக்ஸ்ஷோரூம்) விலையிலும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








