அடுத்த 2ஆண்டுகளுக்கு புதிய மாடல்கள் அறிமுகம் இல்லை: ஃபியட்

டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலேயே தற்போது ஃபியட் நிறுவனமும் கார் விற்பனை செய்து வருகிறது. ஆனால், கார் விற்பனை எதிர்பார்த்தபடி அமையாததால், விரைவில் தனியாக ஷோரூம்களை திறக்க ஃபியட் முடிவு செய்துள்ளது. மேலும், இந்தியாவுக்காக பிரத்யேக கார் மாடல்களை அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவில் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யப்போவதில்லை என்று தெரிவித்துள்ளது. புன்ட்டோ, லீனியா மிட்சைஸ் செடான் மற்றும் ஸ்டாலியோ ஸ்டைல் ஆகிய கார் மாடல்களை ஃபியட் தற்போது இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிலையில், விரைவில் இந்திய சந்தைக்கென புதிய சிறிய ரக ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக ஃபியட் கூறியிருந்தது. ஆனால், தற்போது அந்த திட்டத்தை ஃபியட் ஒத்தி போட்டுள்ளது. புதிய ஷோரூம்களை திறந்து வலுவான நெட்வொர்க்கை பெற்ற பிறகு இந்தியாவில் புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய ஃபியட் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஃபியட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கூறுகையில்,"ஃபியட் நிறுவனத்தின் பிராண்டு மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். எங்களது டீலர் நெட்வொர்க்கையும் வலுப்படுத்த உள்ளோம். இதைத்தொடர்ந்து, வரும் 2014ம் ஆண்டில் புதிய ஹேட்ச்பேக் காரை அறிமுகம் செய்வோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








