பெட்ரோல் விலை உயர்வு:டீசல் கார்கள் பக்கம் திரும்பும் வாடிக்கையாளர்கள்

பெட்ரோல் விலை மாதா மாதம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், கார் வைத்திருப்பவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், பெட்ரோல் விலையை ஒப்பிடும்போது டீசல் விலை 30 முதல் 35 சதவீதம் குறைவாக உள்ளது.
இதனால், பெட்ரோல் கார்கள் வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்களின் கவனம், தற்போது டீசல் கார்கள் பக்கம் திரும்பியுள்ளது. தினமும் பெட்ரோல் போட்டு கட்டுபடியாகாது என்று உணர்ந்து கொண்டு, விலை சற்று கூடுதலாக இருந்தாலும், டீசல் கார்களை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் முக்கியத்துவம் கொடுக்க துவங்கியுள்ளனர்.
டீசல் கார்களுக்கான புக்கிங்கும் அதிகரித்து வருவதாக ஆட்டோமொபைல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பெட்ரோல் கார்களை விட, டீசல் கார்களில் செல்வதற்கான செலவும் மிக குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாருதி சுஸுகி தலைமை பொது மேலாளர் சஷாங்க் வத்சவா கூறியதாவது:
"டீசல் கார்களுக்கான தேவை கணிசமாக உயர்ந்து வருவது கண்கூடாத தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் பெட்ரோல் விலை உயர்வுதான். பெட்ரோல் காரில் ஒரு கி.மீ. செல்வதற்கு ரூ.4.50 செலவாகிறது. அதே டீசல் காரில் ஒரு கி.மீ.க்கு ரூ.2 மட்டுமே செலவாகிறது.
இதனால், மக்களின் விருப்பம் டீசல் கார்கள் பக்கம் திரும்பியுள்ளது. தற்போது, டீசல் கார்களின் சந்தை பங்களிப்பு 35 முதல் 37 சதவீதமாக உள்ளது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 40 சதவீதமாக உயரும். மேலும், தற்போது ஆண்டுக்கு 2 லட்சம் டீசல் கார்கள் விற்பனையாகிறது.
ஆனால், வரும் ஆண்டுகளில் இது ஆண்டுக்கு 3 லட்சம் கார்களாக அதிகரிக்கும். டீசல் கார்களுக்கு அதிகரித்து வரும் தேவையை கருத்தில்கொண்டு, மேலும், பல புதிய டீசல் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








