டெல்லியில் 180 கிமீ வேகத்தில் சென்ற சூப்பர் கார் காம்பவுண்டு சுவரில் மோதி விபத்து

பரிதாபாத்தை சேர்ந்தவர் அங்கத் சிங்(23). இவர் தனது தந்தை நடத்தி வரும் தொழிற்சாலையை பார்வையிட்டுவிட்டு அங்கிருந்து தனது போர்ச்சே கரீரா சூப்பர் காரில் டெல்லியிலுள்ள சீக்கிய குருத்வாரா ஒன்றுக்கு புறப்பட்டார்.
அவருடன் காரில் செர்ரி சிங்(28)என்பவரும் வந்தார். டெல்லி, இந்தியா கேட் அருகிலுள்ள ஜாகீர் உசேன் மார்க் பகுதி அருகில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அவர்கள் வந்துகொண்டிருந்தனர். அப்போது, அங்கத் சிங் காரை அதிவேகமாக ஓட்டி வந்தததாக தெரிகிறது.
வளைவு ஒன்றில் திரும்ப முற்பட்டபோது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பூங்கா ஒன்றின் காம்பவுண்டு சுவர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இருவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து டெல்லி திலக் மார்க் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்," அந்த கார் 180 கிமீ வேகத்தில் சென்றததால்தான் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது. இருப்பினும், காரில் இருந்த ஏர்பேக்குகள் உரிய நேரத்தில் விரிந்து அவர்கள் இருவரின் உயிரையும் காப்பாற்றியுள்ளது," என்றார்.
காரை தாறுமாறாக ஓட்டிவந்ததற்காக அங்கத் சிங்கை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர். விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது. மேலும், கார் மோதிய வேகத்தில் அந்த பூங்காவின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. அதிவேகமாக கார் வந்தபோது எதிரில் எந்த வாகனமும் வராததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
காரை 180கிமீ வேகத்தில் ஓட்டிவந்த அங்கத் சிங் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அங்கத் சிங் ஓட்டிவந்த ரூ.1.5 கோடி மதிப்புடைய அந்த போர்ச்சே கரீரா சூப்பர் கார் மணிக்கு அதிகபட்சம் 304 கிமீ வேகத்தில் செல்லும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








