உள்நாட்டு உதிரிபாகங்களால் கார் விலையை குறைத்தோம்- ஹோண்டா

இந்தியாவின் பிரிமியம் செடான் கார் மார்க்கெட்டில் ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் சி்ட்டி கார்தான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன். கார் மார்க்கெட்டில் பாதி இடத்தை பிடித்து வைத்திருக்கும் மாருதி நிறுவனத்தால் கூட, ஹோண்டா சிட்டி காரின் மார்க்கெட்டை சீண்ட முடியவில்லை.
அழகிய வடிவமைப்பு, தரமான பாகங்கள் என ஹோண்டா சிட்டி காரை தேர்ந்தெடுக்க வாடிக்கையாளர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தன. ஆனால், சில மாதங்களுக்கு முன் சிட்டி காரின் மார்க்கெட் தகர்ந்துவிட்டது.
சமீபத்தில் சந்தையில் புகுந்து கலக்கி வரும் வோக்ஸ்வேகன் வென்ட்டோ, அறிமுகமாகி 10 மாதங்களிலேயே ஹோண்டா சிட்டியை ஓரங்கட்டிவிட்டது.
இதனால், சற்று அதிர்ந்துபோன ஹோண்டா, சிட்டியை மீண்டும் முதலிடத்திற்கு கொண்டுவரும் முயற்சிகளை தீவிரப்படுத்தியது. இதற்கு ஒரே ஆயுதம் விலை குறைப்பு மட்டும்தான் என்று முடிவு செய்தது.
கடந்த மாதம் சிட்டி காரின் விலையை அதிரடியாக ரூ.66,000 வரை குறைத்து மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிராண்டு மதிப்பையும் தாண்டி ஹோண்டா விலையை குறைத்தது சந்தை நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், சிட்டி காரின்விலை குறைப்பு பற்றி ஹோண்டா விளக்கம் கொடுத்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் கூறுகையில்," சிட்டி காருக்கான உதிரிபாகங்கள் இறக்குமதியை கணிசமாக குறைத்துவிட்டோம்.
உள்நாட்டிலேயே அந்த காருக்கான உதிரிபாகங்களை பெறுகிறோம். இதனால், அந்த காரின் விலையை கணிசமாக குறைக்க முடிந்தது. விலை குறைப்புக்கு வேறு எதுவும் காரணமில்லை," என்று கூறினார்.
இதேபோன்று, ஜாஸ் ஹேட்ச்பேக் காரின் விலையையும் ரூ.1.75 லட்சம் வரை ஹோண்டா குறைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








